புதுடெல்லி: இந்தியாவின் 2025 - 26ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை (பிப்ரவரி 1) தாக்கல் செய்து உரையாற்றினார்.
வரவுசெலவுத் திட்டத்தில் மிக முக்கியமாக, தனிநபர் வருமான வரி உச்சவரம்பை ரூ. 12 லட்சமாக உயர்த்தி அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
கிட்டத்தட்ட 1.15 மணிநேரம் உரையாற்றிய நிதியமைச்சர், ’வானோக்கி வாழும் உலகெல்லாம்’ என்ற செங்கோன்மை அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறளை மேற்கோள்காட்டி பேசினார்.
வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து புதிய திட்டங்கள், தொழில்முனைவோருக்கு சிறப்பு அறிவிப்புகள் வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டன.
ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஏற்கெனவே உள்ள ரூ.10,000 கோடியுடன் கூடுதலாக ரூ.10,000 கோடி உதவி, முதன்முறையாக ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைத் தொடங்கும் 5 லட்சம் பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவை கல்வியில் ஊக்குவிக்கும் வகையில் ரூ.500 கோடி முதலீட்டில் புதிய செயற்கை நுண்ணறிவு மையம் உருவாக்கம், அடுத்த 5 ஆண்டுகளில் 50,000 ‘அடல் ஆய்வகங்கள்’ அரசுப் பள்ளிகளில் உருவாக்கம், அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் மையங்கள் போன்றவையும் அறிவிக்கப்பட்டன.
காலணிகள் மற்றும் தோல் துறையில் கவனம் செலுத்தும் புதிய திட்டம் மூலம், 22 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளவில் பொம்மைகள் தயாரிப்பில் இந்தியா மையமாக உருவெடுக்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
தெருவோரக் கடை வைத்திருப்பவர்களுக்கு உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன் பெற கடன் அட்டை வழங்கப்படும்.
இ-ஷ்ரம் (e-shram) இணையத்தளத்தில் இணையவழி ஊழியர்கள் (கிக்) பதிவு செய்துகொள்ளலாம் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதன்மூலம், அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படுவதுடன் சுகாதாரக் காப்பீடு வழங்கப்படும்.
வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டம் 2028 வரை நீட்டிக்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ. 1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளன.