புதுடெல்லி: கடந்த ஆண்டு இணையவழி மோசடிகள் மூலம் இந்தியக் குடிமக்கள் ரு.20,000 கோடியை (S$2.85 பில்லியன்) இழந்துவிட்டனர்.
ஆக அதிகமாக டெல்லிவாசிகள் மட்டும் ரூ.1,250 கோடி பறிகொடுத்தனர் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 2024ஆம் ஆண்டு மட்டும் டெல்லியில் மின்னிலக்கக் கைது நடவடிக்கை என்ற பெயரில் ஏராளமானோர் ஏமாற்றப்பட்டனர். அவர்களிடம் ஏறக்குறைய ரூ.1,100 கோடி பறிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்தத் தொகை ரூ.1,250 கோடியாக அதிகரித்துள்ளது.
கடந்த 2024ல் 10% தொகை மீட்கப்பட்ட நிலையில் 2025ல் அது 24%ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு நாடு முழுவதும் இணைய மோசடிகள் காரணமாக பொதுமக்கள் ரூ.20,000 கோடியை இழந்துவிட்டதாகவும் மோசடி குறித்து 24 மணி நேரத்துக்குள் புகார் அளித்தால் இழந்த தொகையை மீட்க வாய்ப்பு உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
அண்மையில் டெல்லியைச் சேர்ந்த மருத்துவத் தம்பதியரை மின்னிலக்கக் கைது நடவடிக்கை என்று கூறி ஒரு கும்பல் மோசடி செய்து ரூ.15 கோடியை அபகரித்தது.
இதுபோன்ற மோசடிக் கும்பல்களை கம்போடியா, லாவோஸ், வியட்னாம் நாடுகளைச் சேர்ந்த சிலர் இயக்குவதாகக் கூறப்படுகிறது.

