அகமதாபாத்: இந்தியக் கடலோரக் காவல்படையினரும் குஜராத் மாநிலப் பயங்கரவாதத் தடுப்புப் படையினரும் இணைந்து ரூ.1,800 கோடி (S$275 மில்லியன்) மதிப்புள்ள 300 கிலோ போதைப்பொருளைக் கைப்பற்றினர்.
கடத்தல்காரர்கள் அந்தப் போதைப்பொருளை அரபிக்கடலில் போட்டுவிட்டு, அனைத்துலகக் கடல் எல்லைப் பகுதியைத் தாண்டி, தப்பிச்சென்றதாக அதிகாரிகள் திங்கட்கிழமை (ஏப்ரல் 14) தெரிவித்தனர்.
குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் படையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, ஏப்ரல் 12-13 இரவில் இந்தக் கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அனைத்துலக கடல் எல்லைப் பகுதிக்குத் திருப்பிவிடப்பட்ட கடலோரக் காவல்படைக் கப்பல், அங்குச் சந்தேகத்திற்குரிய படகு ஒன்றைக் கண்டனர்.
கடலோரக் காவல்படையைக் கண்டதும், படகிலிருந்த போதைப்பொருளைக் கடலில் போட்டுவிட்டு கடத்தல்காரர்கள் பாகிஸ்தான் கடல் எல்லைப் பகுதிக்குத் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இரவாக இருந்தபோதிலும் கடற்பகுதியில் முழுமையாகச் சோதனை மேற்கொண்டு, அந்தப் போதைப்பொருளை மீட்டது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மெத்தபெட்டமைன் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
பின்னர் அது கடலோரக் காவல்படைமூலம் போர்பந்தருக்குக் கொண்டுசெல்லப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி இதுகுறித்து தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அண்மைய ஆண்டுகளாக, கடலோரக் காவல்படையும் பயங்கரவாத எதிர்ப்புப் படையும் இணைந்து இத்தகைய 13 சட்ட அமலாக்க நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலேயே ஆக அதிகமாக 1,640 கிலோமீட்டர் நீளக் கடலோரப் பகுதியை குஜராத் கொண்டுள்ளதால் அதன் வழியாகப் போதைப்பொருளைக் கடத்த அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகச் சொல்லப்படுகிறது, குறிப்பாக, கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கடினமாக இருக்கும் கட்ச் பகுதி வழியாகப் போதைப்பொருள் கடத்தல் முயற்சிகள் அதிகம் இடம்பெறுவதாகக் கூறப்படுகிறது.