புதுடெல்லி: இந்திய பங்குச்சந்தை நிலவரங்கள் கடந்த ஓராண்டாகப் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகின்றன.
இந்நிலையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீடுகளைத் தொடர்ந்து திரும்பப் பெற்று வருவதால் பல்வேறு தரப்பினரும் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதத்தில் ரூ.31,000 கோடி மதிப்புள்ள முதலீடுகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையில் இருந்து திரும்பப் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இதற்கான காரணம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல்வேறு முக்கியத் தகவல்கள் தெரிய வந்துள்ளன.
தற்போது உலக முதலீட்டாளர்களின் பார்வை பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவு, பகுதி மின்கடத்தி, ‘கிளவுட்’ உள்கட்டமைப்பு ஆகியவற்றில்தான் குவிந்துள்ளது. அதனால் இயல்பாகவே அத்துறைகளில் முதலீடுகள் அதிகரிக்கின்றன.
ஆனால், இந்தியா இதில் பின்தங்கி உள்ளது என்றும் அதனால் இந்திய நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை முதலீட்டாளர்கள் இழந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் முதலீட்டாளர்கள் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு முழுமையான செயற்கை நுண்ணறிவுச் சூழலமைப்பு இல்லை என்கிறார்கள் துறைசார் நிபுணர்கள்.
‘நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவின் நிலை’ என்ற தலைப்பில் அண்மையில் வெளியான ஆய்வறிக்கையில், நிபுணத்துவத்தைப் பொறுத்தவரை இந்திய நிறுவனங்கள் உலகளாவிய நிறுவனங்களைவிட பின்தங்கி உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவில் உள்ள ஏஐ தரவு மையங்களின் மதிப்பிடப்பட்ட திறனை ஐந்து கிகாவாட்டில் இருந்து 20 கிகாவாட்டாக, அதாவது நான்கு மடங்காக அதிகரிக்க வேண்டியிருக்கும் என்றும் ப்ரைமஸ் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சமீர் ஜெயின் கூறியுள்ளார்.
“ஒரு செயற்கை நுண்ணறிவுத் தரவு மையத்தை அமைக்க, 6 முதல் 8 பில்லியன் டாலரும் குறை மின்கடத்தி உற்பத்தி ஆலை அமைக்க 9 முதல் 10 பில்லியன் டாலரும் செலவாகும்.
ஆனால், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கக்கூடிய வகையில் இந்தியாவில் பெரிய பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் எதுவுமில்லை என்றும் சமீர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் இந்தியாவுக்கு 350,000 செயற்கை நுண்ணறிவு நிபுணர்கள் தேவைப்படுகின்றனர்.
இந்திய நிறுவனங்கள் பெரும்பாலும் ‘சேவை’ சார்ந்தவையாக உள்ளன. ஆனால், வன்பொருள் தயாரிப்பிலும் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் இந்தியா இன்னும் வெகுவாக முன்னேற வேண்டியுள்ளது.
தைவானின் டிஎம்சி, சாம்சங் உள்ளிட்ட மூன்று பகுதி மின்கடத்தி நிறுவனங்கள் மட்டும் ஏறக்குறைய 1.75 டிரில்லியன் அமெரிக்க டாலர் முதலீடுகளை ஈர்த்துள்ளன.
ஆனால், இந்திய பங்குச் சந்தையில் ஒட்டுமொத்த வெளிநாட்டு முதலீடு என்பது வெறும் 750 பில்லியன் டாலர் மட்டுமே என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், இந்தியப் பொருளியல் வலுவாக இருந்தாலும், உலகளாவிய காரணிகள் சில முதலீடுகளைப் பாதிக்கின்றன.
ஈரான், இஸ்ரேல் போர்ச் சூழல் காரணமாக, கச்சா எண்ணெய் விலையும் ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பும் உயர்ந்துள்ளன.
அமெரிக்க கடன் பத்திரங்களின் வட்டி உயர்ந்துள்ளது. இதனால்தான் தங்கத்தில் முதலீடு செய்வோர் எண்ணிக்கையும் திடீரெனச் சரிந்துள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

