தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாட்டு அதிர்ஷ்டக் குலுக்கலில் இந்தியருக்கு ரூ.45 கோடி பரிசு

1 mins read
da745a4b-f92f-4204-a570-bac9f29e1256
அதிர்ஷ்டக் குலுக்கலில் பெரும்பரிசு வென்ற ஸ்ரீஜு. - படம்: மஹ்ஸூஸ்/எக்ஸ்

துபாய்: கடந்த வாரம் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் (யுஏஇ) நடந்த அதிர்ஷ்டச் சீட்டுக் குலுக்கலில் இந்தியர் ஐவருக்குப் பெரும்பரிசு விழுந்தது.

எண்ணெய்த் தொழிற்சாலை ஒன்றின் கட்டுப்பாட்டு அறை ஊழியராகப் பணிபுரியும் ஸ்ரீஜு என்பவருக்கு 20,000,000 திர்ஹம் (S$7.34 மில்லியன், ரூ.45 கோடி) பரிசுத்தொகை கிடைத்தது.

கடந்த புதன்கிழமை இடம்பெற்ற 154வது ‘மஹ்ஸூஸ் சாட்டர்டே மில்லியன்ஸ்’ அதிர்ஷ்டச்சீட்டுக் குலுக்கலில் அவருக்குப் இந்தப் பெருந்தொகை கிடைத்தது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 39 வயது ஸ்ரீஜு கடந்த 11 ஆண்டுகளாக யுஏஇயில் பணிபுரிந்து வருகிறார்.

வேலையிடத்தில் இருந்தபோது தமக்கு இவ்வளவு பெரிய தொகை பரிசு கிடைத்திருப்பதை அறிந்து அதிர்ச்சியும் வியப்பும் அடைந்ததாக ஸ்ரீஜு சொன்னார்.

“காரில் ஏறி அமர்ந்த நான், அதை இயக்குவதற்குமுன் எனது மஹ்ஸூஸ் கணக்கைப் பார்த்தபோது, என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. எனக்குப் பரிசு விழுந்திருப்பதைக் கண்டபோது என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பிப் போனேன். நான் வென்றது உண்மைதானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள அதிகாரபூர்வ தொலைபேசி அழைப்பு வரும்வரை காத்திருந்தேன்,” என்றார் ஆறு வயது இரட்டைப் பிள்ளைகளுக்குத் தந்தையான ஸ்ரீஜு.

பரிசுப்பணத்தைக் கொண்டு, இந்தியாவில் ஒரு வீடு வாங்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியதாக ‘கல்ஃப் நியூஸ்’ செய்தி தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்