மும்பை: இந்தியாவின் ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ தாக்குதல் நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்ததால் துருக்கியை இந்தியர்கள் கைகழுவுவது தொடர்ந்து வருகிறது.
அவ்வகையில், இந்தியா முழுவதுமுள்ள பருத்தி வணிகர்கள் துருக்கியுடனான வணிகத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக இந்தியப் பருத்தி வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் அதுல் கனத்ரா அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகத் துருக்கியைப் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
“இந்தியாவிலிருந்து பருத்தியையும் பிற பொருள்களையும் துருக்கி இறக்குமதி செய்வதை அறிவீர்கள். கடந்த 2024ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து பருத்தி உட்பட 74.27 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருள்களைத் துருக்கி இறக்குமதி செய்தது,” என்று திரு கனத்ரா தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னரும் துருக்கி, இந்தியாவிற்கு எதிராக நடந்துகொண்டது என்றும் ஐக்கிய நாட்டு நிறுவனம் உட்பட அனைத்துலக அளவிலும் அந்நாடு இந்தியாவிற்கு எதிராகச் செயல்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“துருக்கியின் செயல்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராக உள்ளன,” என்ற அவர், ஆயுதங்களை வழங்கியது உட்பட பல வழிகளில் துருக்கி, பாகிஸ்தானுக்கு ஆதரவளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.