தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரிஸ்பனில் இந்திய துணைத் தூதரகம்

2 mins read
c2a6cc46-1df9-4bb7-9e67-a52337b19f09
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஞாயிறு அன்று குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் பேசினார் - படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 2

பிரிஸ்பன்: பிரிஸ்பனில் புதிய இந்திய துணை தூதரகத்தை திங்கட்கிழமை அன்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்துள்ளார்.

அது ஆஸ்ரேலியாவில் உள்ள நான்காவது இந்தியத் தூதரக அலுவலகம் ஆகும். மற்ற அலுவலகங்கள் சிட்னி, மெல்பர்ன், பெர்த் ஆகிய நகரங்களில் உள்ளன.

அந்தத் தூதரகம் குயின்ஸ்லாந்து மாநிலத்துடனான இந்தியாவின் உறவுகளை வலுப்படுத்துவது, வர்த்தகத்தை மேம்படுத்துவது, கல்வி தொடர்பான தொடர்புகளை வளர்ப்பது, புலம்பெயர்ந்தோருக்கான சேவைகளை வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்ளும் என்று ஜெய்சங்கர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ஜெய்சங்கர், ஞாயிறு அன்று குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் பேசினார்.

எல்லையில் இருந்து இந்திய - சீன படைகள் திரும்பப் பெறப்பட்டது இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்தும் என்று தமது உரையில் அவர் தெரிவித்தார்.

இந்தியா – சீனா இடையே ஏற்பட்ட உடன்பாட்டை தொடர்ந்து கிழக்கு லடாக்கின் டெம்சோக், டெப்சாங் ஆகிய பகுதிகளில் இருந்து இருநாட்டு வீரர்களும் திரும்ப பெறப்பட்டனர். இதையடுத்து டெம்சோக் பகுதியில் சனிக்கிழமை இந்திய ராணுவம் வழக்கமான காவல் பணியை ஆரம்பித்தது. இதேபோல் டெப்சாங் பகுதியில் ஞாயிறு முதல் இந்திய ராணுவம் காவல் பணியை தொடங்கி உள்ளது என்று அவர் கூறினார்.

“2020ஆம் ஆண்டுக்கு பிறகு உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் அதிக எண்ணிக்கையில் சீனப் படைகள் நிறுத்தப்பட்டன. இந்தியாவும் அதிக வீரர்களை நிறுத்தியது. இதனால் இருதரப்பு உறவுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. 4 ஆண்டுகால பிரச்சினைக்கு தற்போது முடிவு எட்டப்பட்டு படைகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. இதனால் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கை” என்றார்.

ரஷ்யா - உக்ரேன் போர் , இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்தும் அவர் பேசியுள்ளார்.

“இரு நாட்டுக்கும் இடையேயுள்ள சூழலை சீரமைக்க ஏதாவது ஒரு வகையில் முயற்சி செய்து வருகிறோம். கடந்த ஜூலை மாதம் ரஷ்யாவிற்கும், ஆகஸ்ட் மாதம் உக்ரேனுக்கும் பிரதமர் மோடி சென்றார். மற்ற உலக நாடுகள் இந்த விவகாரத்தில் தங்கள் கைகளை விரித்து, இருவரும் மோதிக் கொள்ளட்டும், ஒரு கட்டத்தில் அவர்களே சோர்வடைவார்கள் என காத்திருக்கக்கூடாது“ என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண இந்தியா முயன்று வருவதாகவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெய்சங்கர் தனது சுற்றுப்பயணத்தின்போது, கான்பெர்ரா நகரில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா வெளியுறவு அமைச்சர்கள் கட்டமைப்பு உரையாடலில் பங்கேற்கிறார்.

நவம்பர் 7ஆம் தேதி வரையில் ஆஸ்திரேலியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், வரும் 8ஆம் தேதி சிங்கப்பூருக்கு வருகிறார். அன்று சிங்கப்பூரில் நடைபெறும் ஆசியான் வட்டமேசை மாநாட்டில் அவர் உரையாற்ற உள்ளார்.

குறிப்புச் சொற்கள்