புதுடெல்லி: இந்தியாவில் தற்காப்புத்துறை தளவாட உற்பத்தி மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு இந்த உற்பத்தியானது, 18 விழுக்காடு அளவு அதிகரித்துள்ளது. இத்தகவலை இந்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) தெரிவித்தார்.
தற்காப்புத்துறை உற்பத்தி, ரூ.1.27 லட்சம் கோடியில் இருந்து ரூ.1.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த 2019-20ஆம் நிதியாண்டில், உற்பத்தி அளவு ரூ.79,000 கோடியாக மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், அது தற்போது 90 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்தப் பெரும் வளர்ச்சிக்கு தற்காப்புத்துறை மட்டுமல்லாமல், அனைத்துப் பங்குதாரர்களின் கூட்டு முயற்சியே முக்கியமான காரணம் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் தமது எக்ஸ் தளப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
“இந்தியா இப்படியோர் முக்கியமான மைல்கல்லை எட்டிப் பிடித்ததில் பங்குதாரர்கள், பொதுத்துறை உற்பத்தியாளர்கள், தனியார் துறையினரின் கூட்டு முயற்சிகள் பாராட்டுக்குரியவை.
“இந்த வளரும் போக்கு இந்தியாவின் தற்காப்புத் தொழில்துறை தளத்தை வலுப்படுத்துவதற்கான, தெளிவான குறியீடு,” என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ராணுவத் தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதில் இந்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதையடுத்து, ஆயுதப் படைகளுக்கான நவீன, மேம்படுத்தப்பட்ட ஆயுதங்கள், அவற்றின் அமைப்புகளை உருவாக்குவதில் இந்திய பொதுத்துறை, தனியார் துறை நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. இவற்றின் உற்பத்திகளை இந்திய அரசு கொள்முதல் செய்து, ஆதரவு வழங்கி வருகிறது.
மேலும், வெளிநாடுகளுக்கும் ராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்வதில் இந்தியா முனைப்பு காட்டி வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
தளவாட ஏற்றுமதி கடந்த 10 ஆண்டுகளில் 34 மடங்கு அதிகரித்து உள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த மே மாதம் கூறியிருந்தார்.
அவர் முன் எப்போதும் இல்லாத வகையில் தற்காப்புத்துறை வளர்ந்து வருவதாகவும் இதற்கு ‘தன்னிறைவு பெற்ற இந்தியா’ திட்டம் ஊக்கமளித்து வருவதாகவும் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

