$107 பில்லியன் டாலர் அனுப்பிய இந்தியர்கள்

தாயகத்திற்குப் பணம் அனுப்புவதில் புதிய சாதனை

$107 பில்லியன் டாலர் அனுப்பிய இந்தியர்கள்

2 mins read
a1533de7-5397-4390-95f1-2e181d68f3c2
மாதிரிப்படம்: - பிக்சாபே

புதுடெல்லி: வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இதற்குமுன் இல்லாத வகையில் கடந்த 2023ஆம் ஆண்டு தாய்நாட்டிலுள்ள தங்களது குடும்பங்களுக்கு மொத்தம் 107 பில்லியன் அமெரிக்க டாலர் (S$145 பில்லியன்) அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அவர்கள் 100 பில்லியன் டாலருக்கும் மேற்பட்ட பணத்தை அனுப்பி வைத்துள்ளதாக ‘தி எக்கனாமிக் டைம்ஸ்’ செய்தி தெரிவிக்கிறது.

இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்ட ஓர் ஆய்வின்படி, கொவிட்-19 தொற்றுக் காலத்திற்குப் பிறகு, அமெரிக்கவிலிருந்துதான் அதிகமான பணம் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு வருகிறது. வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் தாய்நாட்டிற்கு அனுப்பும் பணத்தில் 23 விழுக்காடு அமெரிக்காவிலிருந்துதான் வருகிறது.

கொவிட்-19 பரவல் காலகட்டத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து பணம் அனுப்பப்படுவது சரிவை எதிர்கொண்டது.

வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் தாயகத்திற்கு அனுப்பும் பணத்தில் பெரும்பகுதி குடும்பத்தை ஆதரிக்கும் விதமாக அனுப்பப்படுகிறது. அதில் ஒரு பகுதி வைப்புத்தொகை போன்ற சேமிப்புகளுக்கும் ஒதுக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிக்கை குறிப்பிடுகிறது.

கடந்த 2023ஆம் ஆண்டு, அமெரிக்காவிலிருந்துதான் மற்ற நாடுகளுக்கு அதிகமான பணம் அனுப்பப்பட்டுள்ளது. அப்பட்டியலில் இந்தியா (125 பில்லியன் டாலர்), மெக்சிகோ (67 பி. டாலர்), சீனா (50 பி. டாலர்), பிலிப்பீன்ஸ் (40 பி. டாலர்), எகிப்து (25 பி. டாலர்) ஆகியவை முதல் ஐந்து இடங்களில் உள்ளன.

முன்னதாக, வெளிநாட்டில் வசிக்கும் குடிமக்களிடமிருந்து தாயகத்திற்குப் பணம் அனுப்புவதில் இந்தியர்களே தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதாகக் கடந்த டிசம்பர் மாதம் உலக வங்கி வெளியிட்ட ஓர் அறிக்கை தெரிவித்திருந்தது.

கடந்த இருபது ஆண்டுகளாகவே இப்போக்கு தொடர்கிறது. 1990களிலிருந்து தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் வடஅமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடம்பெயரத் தொடங்கியது இதற்கு ஒரு முக்கியக் காரணம்.

அண்மைக்காலமாக, வெளிநாட்டில் வசிப்போர் தங்களது தாய்நாட்டிற்குப் பணம் அனுப்புவது, அந்நிய நேரடி முதலீட்டைக் காட்டிலும் அதிகரித்திருப்பதாக உலக வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது. அப்போக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அது சுட்டியது.

மேலும், குறைந்த, நடுத்தர வருமான நாடுகளுக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்பப்படுவது மெதுவடையும் எனக் குறிப்பிட்ட அவ்வறிக்கை, 2024ஆம் ஆண்டில் அது 3.1 விழுக்காடு உயர்வு காணும் என்றும் கணித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்