இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தோருடன் தொடர்பு வைத்துக்கொள்வதன் மூலம் கலாசாரமும் ஒருவரின் மரபும் பாதுகாக்கப்படுகிறது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்த இந்தியர்கள் தங்களின் வேர்களுடன் இணைவதற்கும் இந்தியாவின் சமூக, பொருளியல் முன்னேற்றத்தைப் புரிந்துகொள்வதற்கும் இந்திய வெளியுறவு அமைச்சு பல ஆண்டுகளாக ‘இந்தியாவை அறிந்துகொள்ளுதல்’ (Know India Programme) எனும் திட்டத்தை ஏற்பாடு செய்து வருகிறது.
இத்திட்டத்தின் 79வது சந்திப்பில் 11 நாடுகளைச் சேர்ந்த 27 செய்தியாளர்களுக்கு அத்திட்டத்தின் ஒரு பகுதியாக அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை அதிகாரபூர்வமாகச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தலைநகர் புதுடெல்லியில் அமைந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் திங்கட்கிழமை (டிசம்பர் 2) மாலை இடம்பெற்ற சந்திப்பில் செய்தியாளர்களுடன் அவர்களின் பயண அனுபவங்களைப் பற்றி உரையாற்றிய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இத்திட்டத்தில் பங்கேற்பவர்கள் இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றிப் பிறரிடம் பகிர்ந்துகொள்ள ஒரு பாலமாக விளங்குவதாகத் தெரிவித்தார்.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியா கண்டுள்ள வளர்ச்சி அளப்பரியது என்று சுட்டிய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் ஏறத்தாழ எட்டு விமான நிலையங்கள் கட்டப்பட்டதாகவும் ஒவ்வொருநாளும் 30 கிலோமீட்டர் தூரம் கொண்ட விரைவுச்சாலைகள் கட்டப்பட்டு வருவதாகவும் அன்றாடம் இரண்டு புதிய கல்லூரிகள் கட்டப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
இந்தியர்கள் பணி, கல்வி போன்ற காரணங்களுக்காகத் தங்களின் நாட்டுக்குள்ளேயே அதிகம் செயல்படுவதால் அது பேரளவில் முன்னேற்றத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறிய அவர், இன்னும் ஐந்தாண்டுகளில் மேலும் அதிக மாற்றங்களை இந்தியாவில் எதிர்பார்க்கலாம் என்றார்.
கடினமான சூழ்நிலை காரணமாக பலர் அவர்களின் தாய்நாடுகளிலிருந்து புலம்பெயரத் தொடங்கியதாகக் கூறிய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு புலம்பெயர்ந்தோர் இந்தியாவுடன் நெருக்கமான தொடர்பு வைத்துள்ளதால் புலம்பெயர்ந்த இந்தியர்கள் இந்தியாவுக்கு மிக முக்கியம் என்று வலியுறுத்தினார்.
அவர்கள் வேறு நாட்டுக் கடவுச்சீட்டை வைத்திருந்தாலும், இந்தியா அவர்களின் தாய்நாடு. இந்தியாவில் இருக்கும் இந்தியர்களும், புலம்பெயர்ந்த இந்தியர்களை வேறாகப் பார்ப்பதில்லை, தங்களுள் ஒருவராகவே கருதி என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியா கடந்த பத்தாண்டுகளில் கண்ட மாற்றங்களில் மின்னிலக்கத்தில் வெகுவான வளர்ச்சி அடைந்துள்ளதை முக்கியமாகக் குறிப்பிட்டார் அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்.
மின்னிலக்க வளர்ச்சியின் காரணமாக இந்தியாவால் அதன் மக்களுக்கு கொவிட்-19 போன்ற சவால்மிக்க நேரங்களில் உதவ முடிந்துள்ளது. வருங்காலத் தலைமுறையினர் தங்கள் வேர்களை மறக்காமல் இருப்பதற்கும் மின்னிலக்கம் மிக முக்கியம் என்று அமைச்சர் ஜெய்சங்கர் அறிவுறுத்தினார்.