தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குவைத்தில் பிரதமர் மோடிக்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் உற்சாக வரவேற்பு

3 mins read
அரபு மொழியில் ராமாயணம், மகாபாரதத்திற்குப் பாராட்டு
55b311eb-4f21-49be-ad36-0df2f2e1d466
குவைத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்த புலம்பெயர்ந்த இந்தியர்கள். - படம்: இந்திய ஊடகம்

குவைத்: பிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத்தில் வசிக்கும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும், ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை அரபு மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்ட அப்துல்லா அல் பரூன், அப்துல் லத்தீப் அல் நெசெஃப் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.

பிரதமர் மோடி இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டு சனிக்கிழமை குவைத் சென்றடைந்தார்.

குவைத் மன்னர் ஷேக் மெஷால் அல் அகமது அழைப்பின்பேரில் அவரது பயணம் அமைகிறது.

தலைநகர் குவைத் நகரில் அவரை அந்நாட்டின் முதல் துணை பிரதமரும் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஷேக் ஃபஹாத், வெளியுறவு அமைச்சர் அப்துல்லா அலி உள்ளிட்டவர்கள் வரவேற்றனர்.

இதையடுத்து, குவைத் மன்னர் ஷேக் மெஷால் அல் அஹமது அல் ஜாபர் அல் ஷாபாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது இரு நாட்டு தலைவர்களும் உறவை வலுப்படுத்துவது மற்றும் வர்த்தக உறவு குறித்து ஆலோசித்தனர். 43 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் குவைத் வந்து இருப்பது பழைமையான நட்பை வலுப்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளாார்.

குவைத் மன்னரை சந்தித்த புகைப்படத்தை சமூக ஊடகத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.

‘அரேபிய வளைகுடா கோப்பையின் துவக்க விழாவின்போது, குவைத்தின் மன்னர் ஷேக் மெஷால் அல் அகமது அல் ஜாபர் அல் ஷாபாவை சந்தித்தது மகிழ்ச்சி’ என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

அப்போது, குவைத்தில் உள்ள 101 வயதான முன்னாள் இந்திய வெளியுறவு அமைச்சு அதிகாரியான மங்கள் சைன் ஹந்தாவையும் பிரதமர் மோடி சந்தித்தார்.

ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை அரபு மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்ட அப்துல்லா அல் பரூன், அப்துல் லத்தீப் அல் நெசெஃப் ஆகியோரையும் பிரதமர் மோடி சந்தித்தார்.

“ராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் அரபு மொழிபெயர்ப்புகளைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அப்துல்லா அல் பரூன், அப்துல் லத்தீப் அல் நெசெஃப் ஆகியோர் இவற்றை மொழிபெயர்த்து வெளியிட்டதற்காக நான் பாராட்டுகிறேன். அவர்களின் முயற்சி உலகளவில் இந்திய கலாசாரத்தின் பிரபலத்தை எடுத்துக்காட்டுகிறது,” என்று தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்திய வம்சாவளியினர் அவரை மேளதாளங்கள், கதகளி நடன நிகழ்ச்சிகளுடன் வரவேற்றனர்.

“ஒவ்வோர் ஆண்டும் குவைத் நாட்டுக்கு நூற்றுக்கணக்கான இந்திய ஊழியர்கள் வருகின்றனர். அவர்கள், இந்திய திறன், தொழில்நுட்பம், பாரம்பரிய அம்சத்துடன் குவைத் நாட்டுக்கு வலுசேர்க்கின்றனர். இந்நாட்டின் மருத்துவ கட்டடைப்பில் இந்திய மருத்துவர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றனர்,” என்று திரு மோடி மேலும் தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக குவைத்தில் வாழும் இந்திய தொழிலாளர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இது குறித்து வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி, குவைத்தின் மினா அப்துல்லா பகுதியில் உள்ள தொழிலாளர் முகாமுக்குச் சென்று, இந்தியத் தொழிலாளர்களுடன் உரையாடி அவர்களின் நலம் குறித்து விசாரித்தார். இது வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தொழிலாளர்களின் நலனுக்கான முக்கியத்துவத்தைக் குறிக்கிறது,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்