கருங்கடல் தாக்குதலில் இந்தியர் உயிரிழப்பு; வெளியுறவு அமைச்சு கண்டனம்

கருங்கடல் தாக்குதலில் இந்தியர் உயிரிழப்பு; வெளியுறவு அமைச்சு கண்டனம்

2 mins read
43844166-9640-4c40-a1bf-ca8a1351314e
ரஷ்ய எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் சென்றபோது ‘எம்வி ஓமோர்ஃபி’ என்ற வணிகக் கப்பல்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. - படம்: எக்ஸ்/ ஏஎன்ஐ டிஜிட்டல்

புதுடெல்லி: கருங்கடல் வழியாகச் சென்ற ‘எம்வி ஓமோர்ஃபி’ என்ற வணிகக் கப்பல்மீது ஜூலை 18ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியக் குடிமகன் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சு வெள்ளிக்கிழமை (ஜூலை 24) தெரிவித்தது.

இத்தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சு, அது பொதுமக்கள் மற்றும் கடல்வழிப் போக்குவரத்துக்குப் பேரச்சுறுத்தல் எனக் குறிப்பிட்டுள்ளது.

ரஷ்ய எல்லைக்குட்பட்ட கடற்பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடந்தபோது, அக்கப்பலில் இந்தியர் மூவர் உட்பட மொத்தம் 10 கடலோடிகள் இருந்தனர். தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்த வேளையில், மற்ற இருவரும் பாதுகாப்பாக உள்ளனர்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த வெளியுறவு அமைச்சு, ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் துணையுடன் அக்குடும்பத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

வணிகக் கப்பல்களைக் குறிவைத்துத் தாக்குவதையும் அப்பாவிக் கடலோடிகளின் மாலுமிகளின் உயிரைப் பறிப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்தியா கண்டித்துள்ளது.

கடல்வழிப் போக்குவரத்துச் சுதந்திரமும் அனைத்துலக வணிகமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பது கவலை அளிப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சு, உலகளாவிய வணிகப் பாதுகாப்பை உறுதிசெய்ய அனைத்துத் தரப்பினரும் தங்களின் பன்னாட்டுப் பொறுப்புகளைச் சரிவர நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியது.

இதற்குமுன் ஜூலை 19ஆம் தேதி உக்ரேன் கடலோரப் பகுதியில் ‘எம்வி கோல்டன் லியோ’ என்ற வணிகக் கப்பல்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் நால்வர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள ரஷ்யத் தூதரகப் பொறுப்பதிகாரியை நேரில் அழைத்து இந்தியா தனது கண்டனத்தைப் பதிவுசெய்தது.

இதனிடையே, கருங்கடல் பகுதியில் செல்லும் இந்தியக் கொடி ஏந்திய கப்பல்களுக்கும் இந்தியக் கடலோடிகளைப் பணிக்கு அமர்த்தியுள்ள கப்பல்களுக்கும் பாதுகாப்பு ஆலோசனைக் குறிப்பு ஒன்றை இந்தியா வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
இந்தியாகருங்கடல்கப்பல்தாக்குதல்