புதுடெல்லி: இந்தியப் பொருளியல் வளர்ச்சி 2025-26 நிதியாண்டில் 7.3%ஆகப் பதிவாகும் என அனைத்துலக நாணய நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளது.
இதற்கு முன்பு இக்காலகட்டத்தில் இந்தியப் பொருளியல் வளர்ச்சி 6.6.%ஆக இருக்கும் என அந்த நிதியம் முன்னுரைத்திருந்தது.
ஆண்டுதோறும் உலக நாடுகளின் பொருளியல் வளர்ச்சி குறித்து ஐஎம்எஃப் உலக வங்கி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அவ்வப்போது கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், அனைத்துலக நாணய நிதியத்தின் கணிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்நிலையில், நடப்பாண்டு ஜனவரி மாதத்துக்கான அறிக்கையை வெளியிட்டுள்ள அந்த நிதியம், உலக அளவிலான பொருளியல் வளர்ச்சி, 2026ஆம் ஆண்டில் ஏறக்குறைய 3.3%ஆக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
2027ஆம் ஆண்டில் இந்த வளர்ச்சி விகிதமானது, 3.2%ஆகக் குறையக்கூடும் என்றும் அந்த நிதியம் தெரிவித்தது.
கடந்த 2025ஆம் ஆண்டு உலகப் பொருளியல் வளர்ச்சியானது, 3.3%ஆக இருக்கும் என அனைத்துலக நாணய நிதியம் கணித்திருந்த நிலையில், ஒப்பீட்டு அளவில் வளர்ச்சியில் பெரிய மாற்றம் இருக்காது எனப் பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, பல்வேறு உலக நாடுகளின் பொருளியல் வளர்ச்சி குறித்தும் ஐஎம்எஃப் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க பொருளியல் வளர்ச்சி நடப்பாண்டில் 2.4%ஆக இருக்கும் என்றும் 2027ல் 2.2%ஆக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டில் அமெரிக்கா 2.1% பொருளியல் வளர்ச்சியைப் பதிவு செய்யும் என ஐஎம்எஃப் கணித்திருந்தது.
தொடர்புடைய செய்திகள்
இதேபோல் சீனாவின் பொருளியல் வளர்ச்சி நடப்பாண்டில் 4.5%ஆக இருக்கும் என்றும் இது கடந்த 2025ஆம் ஆண்டில் கணிக்கப்பட்டிருந்த 5% வளர்ச்சியைவிடக் குறைவு என்றும் தெரிவித்துள்ள ஐஎம்எஃப், 2027இல் சீனா, மேலும் குறைவாக 4% வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்யும் எனக் கணித்திருக்கிறது.
இந்நிலையில், இந்தியாவின் சிறப்பான செயல்பாடு காரணமாக, அதன் பொருளியல் வேகமாக வளர்ச்சி கண்டுவருவதாக ஐஎம்எஃப் பாராட்டியுள்ளது.
இதன் காரணமாக, இந்தியப் பொருளியல் வலுவான நிலையை எட்டியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஐஎம்எஃப், 2025இல் இந்தியப் பொருளியல் வளர்ச்சி 7.3%ஆக இருக்கும் என்றும் 2026இல் இது 6.4%ஆகவும் 2027இல் 6.4% ஆகும் என்றும் தனது கணிப்பை அண்மைய அறிக்கையில் பதிவு செய்துள்ளது.
உலகப் பொருளியல் வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்களிப்பு மிக முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ள ஐஎம்எஃப், இந்தியாவின் பண வீக்கம் அந்நாட்டின் ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள 2% முதல் 6% என்ற இலக்குக்குள் வரும் என்றும் தெரிவித்துள்ளது.


