புதுடெல்லி: அனைத்துலகப் பண நிதியம் (ஐஎம்எஃப்) அண்மையில் வெளியிட்ட அறிக்கையின்படி, 2025ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளியல் வளர்ச்சி 6.6 விழுக்காடாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
சீனாவை விட இந்தியா வேகமாக முன்னேற்றம் காணும் என்றும் ஐஎம்எஃப் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 50% வரி விதித்துள்ளது அமெரிக்கா. இதனால் ஏற்படக்கூடிய தாக்கத்தையும் கடந்து இந்திய பொருளியல் ரீதியில் முன்னேற்றம் காணும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
எதிர்வரும் 2026ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளியல் வளர்ச்சி 6.3% ஆக இருக்கும் என, கடந்த ஜூன் மாதம் உலக வங்கி கணிப்பு வெளியிட்டது. தற்போது அனைத்துலக நாணய நிதியத்தின் அறிக்கையும் இந்தியாவுக்குச் சாதகமாக வெளிவந்துள்ளது.
“இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளியல் கொண்ட நாடாக உள்ளது. சீனாவின் பொருளியல் வளர்ச்சி 4.8% ஆக இருக்கும்.
“உலகளவில் பணவீக்கம் தொடர்ந்து குறையும். ஸ்பெயின் பொருளியல் வளர்ச்சி 2.9%ஆக இருக்கும். அமெரிக்காவும் 1.9% வளர்ச்சி காணும்,” என்கிறது அனைத்துலக நாணய நிதியம்.
“இந்த வளர்ச்சி விகிதமானது, பிரேசில் 2.4% ஆகவும், கனடா 1.2%, ஆகவும், ஜப்பான் 1.1%ஆக இருக்கும் என்றும் அதன் அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு, குறிப்பாக விவசாய உற்பத்தி மற்றும் கிராமப்புற ஊரக வளர்ச்சி, எதிர்பார்த்ததைவிட சிறப்பாக உள்ளதாக அந்நிதியம் மேலும் தெரிவித்துள்ளது.


