ஆசியச் சந்தைகள் சரிந்தபோதும் ஒன்பது மாத உச்சத்தில் இந்தியப் பங்குகள்

ஆசியச் சந்தைகள் சரிந்தபோதும் ஒன்பது மாத உச்சத்தில் இந்தியப் பங்குகள்

படம்: ராய்ட்டர்ஸ்

20 Nov 2026 - 7:30 pm

2 mins read

மும்பை: ஆசியப் பங்குச் சந்தைகளில் பரவலாகப் பங்குகள் விற்கப்பட்ட போதிலும், இந்தியப் பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) ஒன்பது மாத உச்சநிலைக்கு அருகில் நிலைகொண்டிருந்தது. ‘ஆந்த்ரோபிக்’ நிறுவனத்தின் அறிமுகம், செயற்கை நுண்ணறிவுப் பங்குகள் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கத் தவறியதே ஆசியச் சந்தைகளின் சரிவுக்குக் காரணமாக அமைந்தது.

இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 9.59 மணி நிலவரப்படி, ‘நிஃப்டி 50’ குறியீடு 0.09 விழுக்காடு உயர்ந்து 25,537.15 புள்ளிகளாகவும் ‘சென்செக்ஸ்’ 0.07 விழுக்காடு அதிகரித்து 83,074.37 புள்ளிகளாகவும் பதிவாகின. 16 முக்கியத் துறைகளில் ஒன்பது துறைகள் சரிந்தன. உலோகத் துறை 1.8 விழுக்காடு சரிந்த நிலையில், தகவல் தொழில்நுட்பத் துறை 2 விழுக்காடு உயர்ந்து மீண்டது.

இந்த வாரத்தில் நிஃப்டி 1.5 விழுக்காடும் சென்செக்ஸ் 1.8 விழுக்காடும் உயர்ந்து, தொடர்ந்து நான்காவது வாரமாக ஏற்றம் காண்கின்றன. சாதனை அளவான 12.21 பில்லியன் அமெரிக்க டாலர் மாதாந்திர வெளிநாட்டு முதலீடுகள், கச்சா எண்ணெய் விலை குறைவு, சாதகமான வருவாய் முடிவுகள் ஆகியவை இதற்குத் துணைநின்றன.

மறுபுறம், ‘எம்எஸ்சிஐ’ ஆசிய-பசிபிக் குறியீடு 2.5 விழுக்காடு சரிந்ததால், ஆசியச் சந்தைகள் 2020ஆம் ஆண்டிற்குப் பிறகான மோசமான வாராந்திரச் சரிவை நோக்கிச் செல்கின்றன.

“பதின்மூன்று வர்த்தக நாள்களில் நிஃப்டி 10.7 விழுக்காடு உயர்ந்து, உலகிலேயே சிறப்பாகச் செயல்படும் சந்தையாக இந்தியா திகழ்கிறது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் தொடர் கொள்முதலால் ஏற்றம் காணும் போக்கு நீடிக்கிறது,” என்று ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸ் தலைமை முதலீட்டு உத்தி வகுப்பாளர் வி.கே. விஜயகுமார் கூறினார்.

தனிப்பட்ட பங்குகளில், ‘மெக்குவாரி’ நிறுவனத்தின் தரமதிப்பீடு உயர்வால் மேக்ஸ் ஹெல்த்கேர், அப்போலோ மருத்துவமனை பங்குகள் தலா 4 விழுக்காடு உயர்ந்தன. 4.19 பில்லியன் ரூபாய் மெட்ரோ ஒப்பந்தம் பெற்ற திலீப் பில்ட்கான் 3.7 விழுக்காடு உயர்ந்தது. சவூதி அரேபிய நிறுவனத்தின் 8.46 பில்லியன் ரூபாய் திட்டம் ரத்தானதால் ‘அசோகா பில்ட்கான்’ 4 விழுக்காடு சரிந்தது.

குறிப்புச் சொற்கள்