அகமதாபாத்: முதலாளியைக் கத்தியால் குத்திக் கொலைசெய்ததற்காக இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 38 வயது ஆடவர் ஒருவர் வளைகுடா நாடான குவைத்தில் தூக்கிலிடப்பட்டார்.
கபட்வஞ் நகரைச் சேர்ந்த முஸ்தாகிம் பத்தியரா என்ற அந்த ஆடவர் பத்து ஆண்டுகளாக வளைகுடா நாடுகளில் சமையல்காரராக வேலை செய்துவந்தார்.
தொடக்கத்தில் துபாயில் பணிபுரிந்த முஸ்தாகிம், பின்னர் பஹ்ரேனுக்கு இடம்பெயர்ந்தார். அதன்பின் கடைசி ஏழு ஆண்டுகளாக அவர் குவைத்தில் வேலைசெய்தார்.
அங்கு ரேகானா கான் - முஸ்தஃபா கான் என்பவரது வீட்டிலேயே தங்கி, வேலை செய்துவந்தார் முஸ்தாகிம். அப்போது, அவர்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே, ரேகானா கானை முஸ்தாகிம் கத்தியால் குத்திக் கொன்றார்.
கடந்த 2019ஆம் ஆண்டு இச்சம்பவம் நிகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட முஸ்தாகிமுக்கு 2021ஆம் ஆண்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஏப்ரல் 28ஆம் தேதி குவைத்தில் அவருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அங்குள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் அத்தகவலை அவரது குடும்பத்திற்குத் தெரிவித்தனர்.
கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 30) அவரது உடல் சொந்த ஊருக்குக் கொண்டுசெல்லப்பட்டு, இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.

