ரோம்: இத்தாலிய விளைநிலத்தில் வேலைபார்த்த இந்திய ஊழியர் ஒருவர் விபத்தில் கை துண்டிக்கப்பட்ட நிலையில் சாலையோரம் கவனிப்பின்றி விடப்பட்டதால் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இது காட்டுமிராண்டித்தனமான செயல்,” என்று இத்தாலியத் தொழிலாளர் அமைச்சர் மரினா கேல்டிரோன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“விபத்தில் கடுமையாகக் காயமடைந்த நிலையில் கைவிடப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த வேளாண் தொழில் ஊழியர் மாண்டுவிட்டார்,” என்று அமைச்சர் கூறினார்.
சத்னம் சிங் என்ற அந்த ஊழியர், ஜூன் 17ஆம் தேதி லேடினா எனும் இடத்திலுள்ள பண்ணையில் வேலைபார்த்தபோது காயமடைந்தார்.
ரோமுக்குத் தெற்கே உள்ள அவ்வூரில் இந்தியாவைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர்.
சத்னம் சிங் உயிரிழந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்துவதாகவும் சிங்கின் இத்தகைய மரணத்துக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புவதாகவும் அமைச்சர் மரினா கேல்டிரோன் கூறினார்.
30 அல்லது 31 வயது மதிக்கத்தக்க சிங், முறையான ஆவணங்களின்றி வைக்கோல் நறுக்கும் வேலையில் ஈடுபட்டுவந்தார். பணிநேரத்தில் இயந்திரத்தில் சிக்கி அவரது கை துண்டானது என்று ‘ஃபிளாய் சிஜிஐஎல்’ தொழிலாளர் சங்கம் கூறியது.
“அவருக்கு உதவுவதற்குப் பதில் குப்பை மூட்டையைப்போல் அவரது வீட்டுக்கு அருகே முதலாளிகள் விட்டுச் சென்றனர்,” என்றும் இது திகில் படக் காட்சியைப்போன்றது என்றும் சங்கம் குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கின் மனைவியும் நண்பர்களும் உதவி கோரி அழைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது. மருத்துவ உதவி விமானத்தின் மூலம் சிங் ரோமில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் ஆனால் நண்பகல் வாக்கில் உயிரிழந்ததாகவும் காவல்துறைப் பேச்சாளர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இத்தாலியின் ஜனநாயகக் கட்சி, சிங் நடத்தப்பட்ட விதம் ‘நாகரிகத்தின் தோல்வி’ என்று கண்டித்துள்ளது.
சட்டவிரோதமாக, குறைந்த ஊதியத்திற்கு அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களைப் பணியமர்த்துவோருக்கு எதிராகவும் மனிதர்களின் வாழ்க்கைத்தரமும் வேலையிடச் சூழலும் மரியாதைகுரிய வகையில் அமைவதற்கு ஆதரவாகவும் போராடுவதற்குத் தொடர்ந்து முன்னுரிமை தரப்படவேண்டும் என்று அக்கட்சி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
இவ்வேளையில், இத்தாலியில் உள்ள இந்தியத் தூதரகம், பாதிக்கப்பட்ட சிங்கின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு உதவி வழங்க முயல்வதாகத் தெரிவித்துள்ளது. உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் அது கூறியது.

