அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த தந்தை-மகள் சுட்டுக்கொலை

2 mins read
2e8835f5-7471-45d0-9714-e043232d0075
சுட்டுக்கொல்லப்பட்ட பிரதீப் குமார் பட்டேலும் அவரின் மகள் ஊர்மியும். - படம்: ஊடகம்
multi-img1 of 2

வெர்ஜீனியா: அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலத்தில் உள்ள கடை ஒன்றில் இந்தியாவைச் சேர்ந்த 56 வயது ஆடவரும் அவருடைய 24 வயது மகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அக்கடையில் இருவரும் பணியாற்றி வந்ததாகவும் இம்மாதம் 20ஆம் தேதி அதிகாலையில் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பிரதீப்குமார் பட்டேல், ஊர்மி என்ற அவ்விருவரும் குஜராத் மாநிலம், மெஹ்சானா மாவட்டம், கனோடா எனும் சிற்றூரைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் என அறியப்படுகிறது.

சம்பவ இடத்திலேயே பிரதீப் மாண்டுபோனதாகவும் காயமுற்ற ஊர்மி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.

தந்தை-மகள் கொலை தொடர்பில் ஜார்ஜ் ஃபிரேசியர் டெவோன் வார்ட்டன், 44, எனும் ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர்மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொலைக்கான காரணம் தெரியவில்லை.

கொலை நிகழ்ந்த கடை பரேஷ் பட்டேல் என்பவருக்குச் சொந்தமானது. பிரதீப்பும் ஊர்மியும் அவருடைய உறவினர்கள்தான்.

“என் உறவினரின் மனைவியும் அவருடைய தந்தையும் என் கடையில் வேலை செய்துகொண்டிருந்தபோது ஆடவர் ஒருவர் கடைக்குள் புகுந்து அவர்களைச் சுட்டுக்கொன்றுவிட்டார். என்ன செய்வதென எனக்குத் தெரியவில்லை,” என்று உள்ளூர்த் தொலைக்காட்சி நிறுவனத்திடம் பரேஷ் கூறினார்.

கடந்த 2019ஆம் ஆண்டுதான் பிரதீப்பின் குடும்பம் அமெரிக்கா சென்றதாக கனோடாவிலுள்ள அவர்களின் உறவினர்கள் தெரிவித்ததாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.

நான்கு மாதங்களுக்கு முன்புதான் அவர்கள் பரேஷின் கடையில் வேலைக்குச் சேர்ந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அமெரிக்காவில் இந்தியர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. அண்மையில் வதோதராவைச் சேர்ந்த மைனங்க் பட்டேல் என்பவர் நார்த் கரோலினாவில் சுட்டுக்கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அவருடைய கர்ப்பிணி மனைவிக்கும் மகளுக்கும் உதவும் நோக்கில் திரள்நிதி மூலம் நிதி திரட்டப்பட்டது.

குறிப்புச் சொற்கள்