இந்தியப் போர் விமானம் விழுந்து நொறுங்கி விமானிகள் இருவர் உயிரிழப்பு

இந்தியப் போர் விமானம் விழுந்து நொறுங்கி விமானிகள் இருவர் உயிரிழப்பு

1 mins read
c8ea4788-e8eb-4b0a-b079-56d1f9c7c432
விமான விபத்தில் மாண்ட விமானிகள் அனுஜ் (இடது), பர்வேஷ் துராக்கர். - படங்கள்: இந்திய விமானப் படை/எக்ஸ்

கௌகாத்தி: அசாம் மாநிலத்தின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் வியாழக்கிழமை (மார்ச் 5) இந்திய விமானப் படையின் சு-30 எம்கேஐ போர் விமானம் விபத்துக்குள்ளானதில் அதன் விமானிகள் இருவர் உயிரிழந்தனர்.

ஸ்குவாட்ரன் லீடர் அனுஜ், பிளைட் லெப்டினன்ட் பர்வேஷ் துராக்கர் என்ற அவ்விருவரும் விபத்தில் மாண்டுபோனதை எக்ஸ் தளப் பதிவுமூலம் விமானப் படையின் ஊடக ஒருங்கிணைப்பு மையம் உறுதிப்படுத்தியது.

ஜோர்ஹாட் நகரிலிருந்து கிட்டத்தட்ட 60 கிலோமீட்டர் தொலைவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவ்விமானம் விபத்துக்குள்ளானது.

முன்னதாக, ஜோர்ஹாட் விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவ்விமானம் காணாமல் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷ்யத் தயாரிப்பான அந்த விமானத்துடனான தொடர்பு இரவு 7:42 மணிக்குத் துண்டிக்கப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

சு-30 எம்கேஐ என்பது ரஷ்யாவின் சுகோய் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட, இருவர் அமரக்கூடிய, நீண்டதொலைவு செல்லக்கூடிய போர் விமானம். தற்போது இது இந்திய விமானப் படைக்காக ‘எச்ஏஎல்’ நிறுவனத்தால் உரிமம் பெற்றுத் தயாரிக்கப்படுகிறது.

இந்திய விமானப் படையிடம் 260க்கும் மேற்பட்ட சு-30 எம்கேஐ விமானங்கள் உள்ளன.

இதற்குமுன் கடந்த 2024 ஜூன் மாதம் மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் ஒரு சுகோய் போர் விமானம் விபத்துக்குள்ளானது. 2023 ஜனவரியில் குவாலியர் விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்ட மற்றொரு சுகோய்-30 விமானமும் விபத்துக்குள்ளானது.

குறிப்புச் சொற்கள்