இந்தூர்: வேலை-வாழ்க்கைச் சமநிலையைப் பேண, இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் நகரிலுள்ள ஒரு சிறிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் புதுமையான முறையைக் கையாண்டு வருகிறது.
'பணி நேரம் முடிந்துவிட்டது' என்பதைத் தன் ஊழியர்களுக்கு அறிவுறுத்தும் வகையில், ஒரு மென்பொருளை நிறுவியுள்ளது 'சாஃப்ட்கிரிட் கம்ப்யூட்டர்ஸ்' எனும் அந்நிறுவனம்.
ஊழியரின் ஒருவரின் பணிநேரம் முடிந்ததும், அவரது கணினித் திரையில், "உங்களது வேலை நேரம் முடிந்துவிட்டது. இந்த அலுவலகக் கணினி இன்னும் பத்து நிமிடங்களில் அடைக்கப்பட்டுவிடும். தயவுசெய்து வீடு திரும்புங்கள்," என்ற தகவல் ஒளிர்கிறது.
"எங்கள் ஊழியர்கள் நல்ல வேலை-வாழ்க்கைச் சமநிலையைப் பேண வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். இதன்மூலம் தங்கள் குடும்பத்தினருடனும் அன்பிற்குரியவர்களுடனும் அவர்கள் நேரம் செலவிட முடியும்," என்றார் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அஜய் கோலானி.
அந்நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர், இது குறித்த படத்தைத் தமது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துகொள்ள, பலரையும் அது ஈர்த்து வருகிறது.
வாரத்திற்கு 55 மணி நேரம் அல்லது அதற்கும் அதிகமாக வேலை செய்வோர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 35 விழுக்காடும் இதய நோயால் இறக்க 17 விழுக்காடும் அதிக வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கடந்த 2021ஆம் ஆண்டில் எச்சரித்திருந்தது.


