புதுடெல்லி: இந்தியாவின் முப்படைகளும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் கராச்சி நகர் மீது இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பல் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக சற்று முன்னர் ZEE தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் பாகிஸ்தானிலும் அண்மையில் இந்திய விமானப்படை தாக்குதல் மேற்கொண்டது. இதில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய ஒன்பது முகாம்கள் அழிக்கப்பட்டன.
பதான்கோட் ராணுவத் தளம் மீது தாக்குதல்:
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம் நேரடித் தாக்குதல் மேற்கொள்ளாமல், கொரில்லா வகை தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டுள்ளது என்றும் காஷ்மீரில் உள்ள பதான்கோட் ராணுவத் தளம் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
விமானப் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு:
இதற்கிடையே, பாகிஸ்தான் வான்வெளியில் ஊடுருவிய இந்தியா, திடீர் தாக்குதலை நடத்தி வருவதாக வெளியான தகவலையடுத்து விமானப் பயணிகள் மத்தியில் குழப்பமும் அச்சமும் நிலவி வருகிறது. இன்று காலை சிலவடமாநில நகரங்களில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் புதுடெல்லிக்குத் திருப்பிவிடப்பட்டன.
இந்நிலையில், சிங்கப்பூர் நேரம் மே 9ஆம் தேதி, முன்னிரவு 2 மணியளவில் புதுடெல்லி விமான நிலையத்தில் தரையிறங்க அதிக எண்ணிக்கையிலான விமானங்கள் காத்திருப்பதாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எட்டு ஏவுணகளை பாய்ச்சிய பாகிஸ்தான், இடைமறித்து அழித்த இந்தியா
இந்தியாவை நோக்கி பாகிஸ்தான் செலுத்திய எட்டு ஏவுகணைகள் நடுவானில் இடைமறிக்கப்பட்டு, அழிக்கப்பட்டதாக ‘தி ஹிந்து’ ஊடகச் செய்தி தெரிவித்தது.
ஜம்மு, பதான்கோட், உதம்பூர் ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் பாகிஸ்தான் இத்தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது. எனினும், இந்தியாவின் நவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பின் மூலம் இத்தாக்குதல் முயற்சியை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.
தொடர்புடைய செய்திகள்
“இந்தியா இந்த மோதலைத் தொடங்கவில்லை. பாகிஸ்தான் செயலுக்கு பதிலடி மட்டுமே கொடுக்கிறோம். இனி பாகிஸ்தான் எதைத்தேர்வு செய்யப்போகிறது என்பதை அதுதான் தீர்மானிக்க வேண்டும்,” என வியாழக்கிழமை தாக்குதல் நடவடிக்கையைத் தொடங்கியதும் செய்தியாளர்களிடம் பேசியபோது இந்திய வெளியறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
நள்ளிரவு வேளையில் பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என இந்தியத் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
பதான்கோட் ராணுவத் தளம் மீது பாகிஸ்தான் நடத்திய தரைவழி தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்தி்யாவின் முப்படைகளும் நடத்தி வரும் தாக்குதல் பாகிஸ்தானை நிலைகுலைய வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.