தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆசிய நேட்டோவுக்கான எண்ணம் இல்லை: ஜெய்சங்கர்

1 mins read
699a7244-158f-430e-b45c-a01f7fc39286
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

வா‌ஷிங்டன்: ஆசிய நாடுகளை உள்ளடக்கிய ஆசிய நேட்டோ எனும் கூட்டணியை அமைக்க இந்தியாவுக்கு எண்ணம் இல்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 1) கூறினார்.

ஜப்பானின் புதிய பிரதமரான ‌ஷிகெரு இ‌ஷிபா அந்த ஆலோசனையை முன்வைத்திருந்தார். அதுகுறித்துப் பேசிய திரு ஜெய்சங்கர், ஜப்பானைப் போல், ஒப்பந்தம் வரைந்த வேறொரு நாட்டுடன் இந்தியா என்றும் பங்காளியாக இருந்ததில்லை என்று குறிப்பிட்டார்.

அமெரிக்கத் தலைநகர் வா‌ஷிங்டனில் உள்ள அனைத்துலக அமைதிக்கான கார்னகி அறக்கட்டளை நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரு ஜெய்சங்கர் பேசினார்.

“அத்தகைய ஓர் உத்திபூர்வ அமைப்புக்கான கட்டமைப்பு குறித்து நாங்கள் யோசிக்கவில்லை,” என்றார் திரு ஜெய்சங்கர். திரு இ‌ஷிபாவின் ஆலோசனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் பதிலளித்தார்.

இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளும் குவாட் என்றழைக்கப்படும் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. அக்கூட்டணி, சீனாவின் ஆதிக்கத்தைக் கையாளும் நோக்குடன் உருவாக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தற்போது தாங்கள் ஆகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவற்றைக் கையாள நட்பு நாடுகளுடன் மேலும் வலுவான உறவை வைத்துக்கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்ளப்போவதாகவும் திரு இ‌ஷிபா செவ்வாய்க்கிழமையன்று சொன்னார். அந்த வகையில் ஆசிய நேட்டோ கூட்டணி ஒன்றை அமைக்கலாம் என்று அவர் ஆலோசனை வழங்கினார்.

குறிப்புச் சொற்கள்