புதுடெல்லி: மத்திய கிழக்கு மோதல் வலுத்து வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் சிக்கியுள்ள இந்தியக் கப்பல்களும் அவற்றில் உள்ள கடலோடிகளும் பாதுகாப்பாக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
“எங்களது இந்திய நண்பர்கள் பாதுகாப்பான கரங்களில் உள்ளனர். கவலை வேண்டாம்,” என இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப்படைகள் கடந்த சில வாரங்களாக ஈரான் மீது கடும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.
இதையடுத்து, ஹோர்முஸ் நீரிணைப் பகுதி கடற்பாதையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது ஈரான்.
உலகின் 20 விழுக்காடு எரிபொருள் போக்குவரத்து ஹோர்முஸ் நீரிணை வழிதான் நடக்கிறது. இந்நிலையில், மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக, மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கப்பல்களே இந்த நீரிணைப் பாதையைக் கடக்க ஈரான் அனுமதித்தது. இதன் எதிரொலியாக, பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தற்போது இந்தியா, சீனா, ரஷ்யா, ஈராக், பாகிஸ்தான் உள்ளிட்ட நட்பு நாடுகளின் கப்பல்கள் மட்டுமே ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க ஈரான் அனுமதித்துள்ளது.
இதுவரை எட்டு இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியே வெளியேறி உள்ளன. மேலும் கச்சா எண்ணெய், எரிவாயுவுடன் கூடிய இந்தியாவுக்கான 19 கப்பல்கள் அந்த நீரிணைப் பகுதியில் சிக்கியுள்ளன.
“அவற்றுள் ஒன்பது கப்பல்கள் இந்தியக் கொடியுடனும் பத்து கப்பல்கள் வெளிநாட்டுக் கொடியுடனும் காத்திருக்கின்றன,” என்று துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிகள் அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
ஹோர்முஸ் நீரிணையில் 500க்கும் மேற்பட்ட கப்பல்கள் காத்திருக்கும் நிலையில், இந்தியாவுக்கான கப்பல்களில் உள்ள கடலோடிகளின் பாதுகாப்பு குறித்து இந்திய அரசு கவலை அடைந்துள்ளது. எனினும், இந்தக் கவலையைப் போக்கும் விதமாக, இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இந்திய நண்பர்களின் பாதுகாப்பு குறித்த கவலை வேண்டாம் எனத் தெரிவித்துள்ளது.
இதனிடையே, கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டில் எரிபொருளுக்கு எந்தத் தட்டுப்பாடும் ஏற்படவில்லை என்றார்.
ஹோர்முஸ் நீரிணை வழியே இந்தியாவுக்கான கச்சா எண்ணெய்யை ஏற்றிவரும் கப்பல்கள் அப்பகுதியைக் கடப்பதற்கு இந்தியக் கடற்படை உரிய பாதுகாப்பு அளித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் உரிய முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் திரு ராஜ்நாத் சிங் கூறினார்.
மத்திய கிழக்கு பதற்றச் சூழ்நிலையைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தவறான வழியில் செயல்பட முற்பட்டால் இந்தியா அதற்குத் தக்க பதிலடி கொடுக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

