புதுடெல்லி: இந்தியக் குடிமகன் ஒருவர் 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லவுள்ளார்.
இந்திய ஆகாயப் படையின் விமானியான சுபான்ஷு சுக்லா புதன்கிழமை (ஜூன் 11) விண்வெளி செல்லவுள்ளார்.
புளோரிடாவின் கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து SpaceX Dragon விண்கலம் மூலம் திரு சுக்லாவுடன் மூன்று விண்வெளி வீரர்கள் பயணம் மேற்கொள்கின்றனர்.
சிங்கப்பூர் நேரப்படி பிற்பகல் 2.30 மணிவாக்கில் விண்கலம் புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நான்கு வீரர்களும் 14 நாள்கள் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் 1984ஆம் ஆண்டு இந்தியக் குடிமகனான திரு ராகேஷ் சர்மா விண்வெளி சென்றார். அவருக்குப் பிறகு இந்தியக் குடிமகன்கள் யாரும் விண்வெளி செல்லவில்லை.
இதற்கிடையே திரு சுக்லாவின் சொந்த ஊரான லக்னோவில் மக்கள் கொண்டாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
சுக்லாவின் படங்கள் கொண்ட தட்டிகள், பலகைகள் உள்ளிட்டவற்றை வைத்து ஆரவாரமாகப் படமெடுத்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியா, விண்வெளி ஆராய்ச்சியில் தடம் பதிக்கக் கடந்த சில ஆண்டுகளாகக் கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
2035ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்தியாவுக்கான விண்வெளி நிலையத்தை அமைக்க அது திட்டமிட்டுள்ளது.
அதேபோல் 2040ஆம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி வீரரை நிலாவில் கால்பதிக்கத் திட்டமிட்டுள்ளது.