‘இ-விசா’: 11 புதிய பன்னாட்டு நுழைவு வாயில்களை அறிவித்த இந்திய அரசு

‘இ-விசா’: 11 புதிய பன்னாட்டு நுழைவு வாயில்களை அறிவித்த இந்திய அரசு

2 mins read
f9d3070e-e274-42e3-b706-3d1b80c14d1b
தற்போது தரை துறைமுகங்களான தர்ரங்கா, கெடே, கோஜதங்கா, ஹரிதாஸ்பூர், ஜெய்கான், டாவ்கி, மோரே, அட்டாரி (சாலை), போபால், திருப்பதி ஆகியவை புதிய நுழைவாயில்களாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. - கோப்புப் படம்: தி பயனீர்
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்திய அரசு வழங்கும் ‘இ-விசா’ வைத்திருப்பவர்கள் அந்நாட்டுக்குள் நுழையக்கூடிய அனைத்துலகத் துறைமுகங்களின் எண்ணிக்கை 88ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இவற்றுள் 37 விமான நிலையங்கள், 38 கடல் துறைமுகங்கள், 13 தரைவழித் துறைமுகங்கள் அடங்கும்.

அனைத்துலகப் பயணிகளுக்கான ‘இ-விசா’ சேவையை மேலும் எளிதாக்குவதும் பயனுள்ளதாக மாற்றுவதும்தான் நோக்கம் என இந்திய அரசு கூறியுள்ளது.

எனினும், பாகிஸ்தான் கடப்பிதழ் வைத்திருக்கும் அல்லது பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த அனைத்துலகப் பயணிகளுக்கு ‘இ-விசா’ வசதி இல்லாததால், அவர்கள் இந்தியத் தூதரகத்தில் வழக்கமான விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என இந்திய அரசாங்க இணையத்தளம் தெரிவித்துள்ளது.

மருத்துவம், மாணவர், மலையேற்றம், கப்பல் பயணம், சுற்றுலா, இடைவழிப் பயணம், குழுப் பயணம், வணிகம் உள்ளிட்ட 17 துணைப்பிரிவுப் பயணிகளுக்குத் தற்போது கிடைக்கும் ‘இ-விசா’ சேவையானது, விண்ணப்பித்த மூன்று நாள்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு வழங்கப்படுவதாக இந்திய அரசின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் 95 விழுக்காடு விண்ணப்பதாரர்கள் பயனடைகின்றனர்.

43 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கான இந்திய விசா நடைமுறைகளை எளிமையாக்க 2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஏற்பாடு தற்போது 172 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்குச் சேவையை அளிக்க வழிவகை செய்துள்ளது.

தற்போது தரை துறைமுகங்களான தர்ரங்கா, கெடே, கோஜதங்கா, ஹரிதாஸ்பூர், ஜெய்கான், டாவ்கி, மோரே, அட்டாரி (சாலை), போபால், திருப்பதி ஆகியவை புதிய நுழைவாயில்களாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

சுற்றுலாப் பயணிகளுக்குப் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிலும் தொழில்நுட்பக் கட்டமைப்பிலும் எவ்விதச் சமரசமும் செய்யப்படவில்லை என இந்திய அரசு அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரம், பாகிஸ்தான் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கும் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டவர்களுக்கும் இந்த ‘இ-விசா’ சலுகை பொருந்தாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இந்திய அரசின் இந்தப் புதிய நடவடிக்கைமூலம், திருப்பதி போன்ற புனிதத்தலங்களுக்கும் வடகிழக்கு மாநிலங்களின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளுக்கும் வெளிநாட்டுப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
விசாகடப்பிதழ்விமான நிலையம்கடல்துறைமுகம்பயணிகள்பாகிஸ்தான்