புதுடெல்லி: இந்திய ராணுவத்திற்குத் தேவைப்படும் ஆளில்லா விமான எதிர்ப்பு மின்னணுப் போர்க் கருவிகள், மிகக் குறுகிய தூர வான் தற்காப்புக் கருவிகள் உள்ளிட்ட ரூ.52,000 கோடி மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வாங்கத் தற்காப்பு அமைச்சு வெள்ளிக்கிழமை (ஜூலை 3) ஒப்புதல் அளித்துள்ளது.
வான்வெளியில் கண்காணிப்பை மேம்படுத்த இந்திய ஆகாயப் படைக்குத் தேவையான கருவிகளும் அவற்றில் அடங்கும்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, மனிதனால் எடுத்துச் செல்லக்கூடிய பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணை, நடுத்தர தூரம் சென்று தரையிலிருந்து வான் நோக்கிச் சுடும் ஏவுகணை ஆகியன ராணுவப் படைக்குத் தேவைப்படும் ஆயுதங்கள்.
அதேபோலக் கடற்படைக்கு, பன்முனைத் தாக்குதல் திறன் கொண்ட தரைக்கண்ணிகள் போன்றவற்றையும் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான தற்காப்புக் கொள்முதல் மன்றம், இந்த உத்தேசக் கொள்முதலுக்கான இசைவை அளித்துள்ளது.
இனி, இந்தக் கொள்முதலுக்கு நிதி அமைச்சு மற்றும் தற்காப்பு அமைச்சுகளுக்குட்பட்ட குழுவிடமிருந்து ஒப்புதல் பெறப்படும்.
ஆளில்லா விமான எதிர்ப்பு மின்னணுப் போர்முறையை நிர்வகிக்கும் அமைப்புக்கு ஆகாஷ் தரங் என்று பெயர்.
ராணுவப் பிரிவுகளுக்குத் திறமையான ஆளில்லா விமான எதிர்ப்புப் பாதுகாப்பை ஆகாஷ் தரங் வழங்கும்.
தற்காப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, மனிதனால் எடுத்துச் செல்லக்கூடிய பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணையைத் தருவிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
புதிய கொள்முதலால், எதிரியின் இயந்திரமயமாக்கப்பட்ட அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் தரைப்படை வீரர்களின் திறனை மேம்படுத்துவதற்காக, 100 ஏவுகணை ஏவுதளங்கள், 2,300 ஏவுகணைகள் மற்றும் ஐந்து பாவனைக் கருவிகளை ராணுவம் பெறும்.

