புதுடெல்லி: விமானங்களில் கைப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை மின்னூட்டம் செய்வதற்கு மின்தேக்கியைப் (பவர் பேங்க்) பயன்படுத்த இந்திய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தடை விதித்துள்ளது.
அண்மைக் காலமாக விமானங்களில் எடுத்துச் செல்லப்படும் மின்தேக்கிகள் அதிக வெப்பம் காரணமாகத் தீப்பற்றி எரியும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இதையடுத்து, பல முன்னணி விமான நிறுவனங்கள் மின்தேக்கி சாதனத்தை விமானங்களில் எடுத்துச் செல்லத் தடை விதித்துள்ளன.
இந்நிலையில், இந்திய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், விமானங்களில் மின்தேக்கி சாதனத்தைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், “மின்தேக்கி சாதனங்களில் லித்தியம் அயன் மின்கலம் உள்ளது. இவை, கடுமையான வெப்பத்தை உருவாக்கும் திறன் கொண்டவை. இதனால் மின்கசிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, மின்தேக்கிகளைப் பயணிகள் தங்கள் கைப்பையில் மட்டுமே வைத்திருக்க வேண்டும். பயணத்தின்போது எடுத்துச் செல்லப்படும் வேறு எந்தப் பைகளிலும், அவை இருக்கக் கூடாது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“லித்தியம் மின்கலத்தால் ஏற்படும் தீ விபத்துகளைக் கட்டுப்படுத்த தேவையான கருவிகள் விமானத்தில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். அத்தகைய விபத்துகளைக் கையாள, விமான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்குரிய பயிற்சி அளிக்க வேண்டும்,” என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

