புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு, டெல்லியில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடக்கவுள்ளது.
முதற்கட்ட அமர்வு ஜனவரி 28ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடக்கிறது. இரண்டாம் கட்ட அமர்வு மார்ச் 9ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 2ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.
மத்திய அரசின் 2026-27ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில், கூட்டத்தொடரில் எந்தெந்தப் பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்துவது என்பது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கருத்துகளைக் கேட்பதற்காக அனைத்துக்கட்சிக் கூட்டம் நடந்தது.
நாடாளுமன்றக் கூட்டத்தில் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வரவுசெலவுத் திட்டத்தில் புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என்பதால் பட்ஜெட் கூட்டத்தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

