புதுடெல்லி: மத்திய அரசுப் பணியாளர்கள் அனைவரும் காலை 9.15 மணிக்குள் தங்களது அலுவலகத்தில் இருக்க வேண்டும் என இந்தியப் பணியாளர்கள், பயிற்சித் துறை அறிவுறுத்தியுள்ளது.
உயரதிகாரிகள் உட்பட அனைத்துப் பணியாளர்களும் உயிரளவையியல் (பயோமெட்ரிக்) முறையைப் பயன்படுத்தி, தங்களது வருகையைப் பதிவுசெய்ய வேண்டும்.
காலை 9 மணிக்கு வேலை என்றால் ஊழியர்கள் அதிகபட்சம் 15 நிமிடங்கள் தாமதமாக வரலாம். அதன்பின் வரும் ஊழியர்களின் தற்செயல் விடுப்புக் கணக்கிலிருந்து அரைநாள் கழிக்கப்படும் என்று மத்தியப் பணியாளர்கள், பயிற்சித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
“ஏதேனும் ஒரு காரணத்திற்காக ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர முடியாதெனில், அதுபற்றி முன்கூட்டியே தெரிவித்து, விடுப்பிற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்,” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது..
வழக்கமாக, மத்திய அரசு அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணிவரை செயல்படுகின்றன.
இந்நிலையில், இளநிலை ஊழியர்கள் பணிக்குத் தாமதமாக வந்து, முன்கூட்டியே சென்றுவிடுவதாகப் புகார்கள் வந்துள்ளன. இது, மத்திய அரசு அலுவலகங்களை நாடும் பொதுமக்களுக்குச் சிரமம் தருவதாகச் சொல்லப்படுகிறது.
அதே வேளையில், தங்களுக்கு நிலையான வேலை நேரம் இல்லை என்றும் இரவு 7 மணிக்குப் பிறகே அலுவலகத்தைவிட்டுக் கிளம்ப முடிகிறது என்றும் உயரதிகாரிகள் கூறுகின்றனர். அத்துடன், வீட்டிற்குச் சென்றும் வேலை செய்ய வேண்டியுள்ளதாக அவர்கள் புலம்புகின்றனர்.
இதனையடுத்து, “தாமதமாகப் பணியிடத்திற்கு வந்து, வேலை நேரம் முடிவதற்கு முன்பே கிளம்பிச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருப்பது கடுமையாகக் கருதப்படும். அத்தகையோர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று பணியாளர்கள், பயிற்சித் துறை எச்சரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பணியாளர்களிடம் மிகுந்த ஒழுக்கத்தை வலியுறுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது என்றும் அதே நேரத்தில் காலை 10 மணி அல்லது அதற்குப்பின் அலுவலகம் செல்லும் ஊழியர்களுக்கு எரிச்சலூட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

