புதுடெல்லி: ஆறு ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
பகுதி மின்கடத்திக் கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க இந்திய அரசு ரூ.1.9 லட்சம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதற்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.
இந்தியாவில் பகுதி மின்கடத்தி உற்பத்திக்கான கட்டமைப்பை விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கைப்பேசி உற்பத்தியை அதிகரித்து உலகளவில் மின்னணுப் பொருள்களுக்கான உற்பத்தி மையமாக இந்தியாவை நிலைநிறுத்தும் நோக்கத்துடன் இரண்டு முக்கியமான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ‘செமிகான் 2.0’ திட்டத்திற்கு ரூ.1.27 லட்சம் கோடியும் ‘கைப்பேசி உற்பத்தி 2.0’ திட்டத்துக்கு ரூ.62,500 கோடியும் ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
செமிகான் 2.0 திட்டத்தின்கீழ் சில்லு வடிவமைப்பு, பகுதி மின்கடத்திக் கருவிகள், மூலப்பொருள்கள், உற்பத்தி மேம்பாடு-வசதிகள், மேம்பட்ட பரிசோதனை, ஆராய்ச்சி, திறன் மேம்பாடு உள்ளிட்ட அம்சங்களில் கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இந்தத் திட்டம் வெற்றிபெறும் பட்சத்தில் உள்நாட்டு சில்லு உற்பத்தியில் இந்தியா தற்சார்பு நாடாக உருவெடுக்கும் என்றார் அவர்.
அடுத்த ஆறு ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்படும் என்றும், ரூ.2 லட்சம் கோடி மதிப்பில் பகுதி மின்கடத்தி உற்பத்திக்கு வழிவகுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
கைப்பேசி உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டம் (உற்பத்தியும் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டம்) இந்தியாவில் கைப்பேசி உற்பத்தி, ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு மதிப்புகூட்டும் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள திட்டம் என்று விளக்கம் அவர் அளித்துள்ளார்.
இத்திட்டம் செயல்படுத்தப்படும் காலகட்டத்தில் ரூ.39 லட்சம் கோடி மதிப்பிலான கைப்பேசிகள் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்ட திரு அஸ்வினி வைஷ்ணவ், இதன் மூலம் ஏற்றுமதி கணிசமாக அதிகரிக்கும் என்றும் 60,000 பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
கைப்பேசி உற்பத்தியில் உலகளவில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது என்றும் இந்தியாவில் பயன்பாட்டிலுள்ள கைப்பேசிகளில் ஏறக்குறைய 99 விழுக்காட்டுக் கைப்பேசிகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்றும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஆண்டு ரூ.2.62 லட்சம் கோடி மதிப்பிலான கைப்பேசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், இந்தியாவில் 300க்கும் மேற்பட்ட கைப்பேசி உற்பத்தி ஆலைகள் செயல்பாட்டில் உள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
உலகளவில் சில்லுப் பற்றாக்குறை நிலவி வரும் சூழலில் இந்தியாவில் ரூ.1.67 லட்சம் கோடி முதலீட்டுடன் 12 பகுதி மின் கடத்தி உற்பத்தி ஆலைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மேலும் கூறினார்.

