புதுடெல்லி: சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் அவதூறான, போலியான பதிவுகளை அகற்றுவதற்கான காலக்கெடுவை இந்திய அரசு இரண்டு மணி நேரமாகக் குறைத்துள்ளது.
முன்னதாக, இந்தக் காலக்கெடு 24 மணி நேரமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. புதிய நடவடிக்கையின்படி அரசு அல்லது நீதிமன்ற உத்தரவின்கீழ் சட்டவிரோத, சர்ச்சைக்குரிய சமூக ஊடகப் பதிவுகளை அகற்றுவதற்கான காலக்கெடு 36 மணி நேரத்தில் இருந்து மூன்று மணி நேரமாகவும் பயன்பாட்டாளர்களின் புகார்களைப் தீர்ப்பதற்கான கால அவகாசம் 72 மணி நேரத்தில் இருந்து 36 மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக இந்தியாவில் சமூக ஊடகங்களில் வெளியாகும் சர்ச்சைக்குரிய பதிவுகள் குறித்த புகார்கள் அதிகரித்து வருகின்றன.
பயனர்களின் பாதுகாப்பு, உரிமைகளை மனத்தில் கொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் ஆபாசப் பதிவுகளுக்கு கிடுக்கிப்பிடி போடும் வகையில் இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆபாசம், ஆள்மாறாட்டம் போன்ற உணர்வுபூர்வமான விவகாரங்கள் தொடர்பான புகார்கள்மீது இரண்டு மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை இந்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
இது தொடர்பான விதிமுறைகளைப் பின்பற்றத் தவறினால் தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவு 79ன் கீழ் மூன்றாம் தரப்பு பதிவுகளுக்கு வழங்கப்படும் சட்டப் பாதுகாப்பு விலக்கைக் குறிப்பிட்ட தளங்கள் இழக்க நேரிடும் என்று இந்திய அரசு எச்சரித்துள்ளது.


