தங்கம் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தது இந்திய அரசு

தங்கம் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தது இந்திய அரசு

2 mins read
93ef21ec-4cb5-47eb-8d1c-412297830140
தங்க விலை உச்சத்தைத் தொட்டபோதிலும் அதை வாங்கும் ஆர்வம் மக்களிடம் குறையவில்லை. - கோப்புப் படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

புதுடெல்லி: தங்கம், பிற விலைமதிப்புள்ள உலோகங்கள் மீதான இறக்குமதி வரியை 15 விழுக்காடாக உயர்த்துவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த வரி உயர்வு புதன்கிழமை (மே 13 முதல்) அமலுக்கு வந்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய நிதியமைச்சு வெளியிட்ட அறிக்கையில், தங்கம், வெள்ளி இருப்புகளுக்கு 5 விழுக்காட்டு வரியும் பிளாட்டினம் இருப்புகளுக்கு 5.4 விழுக்காட்டு வரியும் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இணக்க நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படுவதற்கு உட்பட்டு, விலைமதிப்புள்ள உலோகங்களுக்கான ஊக்க வரி 4.35 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

மத்திய கிழக்குப் பகுதியில் நீடித்து வரும் மோதல் காரணமாகப் பல நாடுகள் பொருளியல் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன.

இந்தியாவில் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து அதிகரித்துப் புதிய உச்சத்தைத் தொட்டது. எனினும், தங்க நகைகள் வாங்கும் ஆர்வம் மக்களிடம் குறையவில்லை.

இந்நிலையில், தங்கம் வாங்குவதையும் வெளிநாட்டுச் சுற்றுலாக்களையும் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார் பிரதமர் மோடி.

இதையடுத்து, தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கக்கூடும் எனத் துறைசார் நிபுணர்கள் கணித்திருந்தனர்.

இதற்கு வாய்ப்பில்லை என நிதியமைச்சு வட்டாரங்கள் கூறிவந்த நிலையில், வெளிநாடுகளிலிருந்து தங்கம், வெள்ளி வாங்குவதைக் கட்டுப்படுத்தவும் நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் எடுக்கப்பட்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக, தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை இந்திய அரசு திடீரென உயர்த்தியுள்ளது.

6லிருந்து 15 விழுக்காடாக வரி உயர்த்தப்பட்டுள்ளதாகப் புதன்கிழமை வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விலை உயர்ந்த உலோகங்களை நுகர்வோர் பட்டியலில் உலக அளவில், இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவின் இந்த நடவடிக்கையானது, அதன் தங்க நுகர்வைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கவும் ஆசியாவின் மிக மோசமாகச் செயல்படும் நாணயங்களில் ஒன்றான ரூபாய்க்கு ஆதரவளிக்கவும் இந்நடவடிக்கை உதவக்கூடும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

அதேநேரம் வரிவிதிப்பு காரணமாகத் தங்கக் கடத்தல் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2024ஆம் ஆண்டு இந்தியாவுக்கு அதிக அளவில் தங்கம் கடத்தப்படுவதைக் குறைக்கும் வகையில், தங்க இறக்குமதி மீதான வரி குறைக்கப்பட்டது. இதற்கு ஓரளவு பலனும் கிடைத்தது.

தற்போது முதலீட்டு நோக்கங்களுக்காகத் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே இறக்குமதித் தங்கத்தின்மீது மூன்று விழுக்காடு ஒருங்கிணைந்த பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்பட்டுள்ளதால் வங்கிகள் கடந்த ஒரு மாதமாகத் தங்க இறக்குமதியை நிறுத்தி வைத்துள்ளன.

இதன் எதிரொலியாகக் கடந்த ஏப்ரல் மாதம் தங்க இறக்குமதி, கடந்து 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குக் குறைந்துபோனது.

இதனிடையே, வரி உயர்வு காரணமாக, புதன்கிழமை (மே 13) ஒரே நாளில், ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 8,500 அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
தங்கம்விலைஇறக்குமதிவரி