ரூ.5 ஆயிரம் கோடி அரசு நிலங்களைப் பணமாக்க இந்திய அரசு திட்டம்

ரூ.5 ஆயிரம் கோடி அரசு நிலங்களைப் பணமாக்க இந்திய அரசு திட்டம்

சித்திரிப்புப் படம்: பிசினஸ் லைன்

22 Sep 2026 - 7:42 pm

2 mins read

புதுடெல்லி: இந்திய அரசின் சொத்துப் பணமாக்கல் திட்டத்தின்கீழ், பயன்பாடின்றி முடங்கிக்கிடக்கும் ஏறக்குறைய ரூ.5,000 கோடி மதிப்பிலான அரசு சொத்துகளைப் பணமாக்குவதற்கான முக்கியப் பரிந்துரைகளை அந்நாட்டின் தேசிய நிலப்பணமாக்கல் கழகம் வழங்கியுள்ளது.

பல்வேறு இந்திய பொதுத்துறை நிறுவனங்கள், அரசுத்துறைகளின் வசம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும் கட்டடங்களும் பயன்படுத்தப்படாமல் ‘செயலற்ற மூலதனமாக’ முடங்கியுள்ளன.

அவற்றை விற்று அல்லது நீண்டகால குத்தகைக்கு விட்டு, திரட்டப்படும் நிதியை நாட்டின் அடிப்படை உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்குப் பயன்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

இந்த நிதியை மத்திய அரசு உள்கட்டமைப்பு மூலதனச் செலவினங்களுக்கு மாற்றும்போது, அதன் பொருளியல் மதிப்பு 2.5 முதல் 3 மடங்கு வரை அதிகரிக்கும் என நிதித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதாவது, இந்த நிதி சாலைகள், துறைமுகங்கள், மின் உற்பத்தி ஆகியவற்றில் முதலீடு செய்யப்படும்போது, அது ஏறக்குறைய ரூ.12,500 கோடி முதல் ரூ.15,000 கோடி வரையிலான பொருளியல் நடவடிக்கைகளைத் தூண்டும்.

மேலும், கடனில் உள்ள நிறுவனங்களின் உபரி நிலங்களைப் பணமாக்குவதன் மூலம், அவற்றின் கடன் சுமை குறைவதுடன் வங்கிகளின் வாராக்கடனும் கணிசமாகக் குறையும்.

வரி அல்லாத வருவாயை அதிகரிக்கும் இந்த நடவடிக்கை, அரசின் நிதிப்பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைக்கப் பெரிதும் உதவும்.

சொத்துகளின் உண்மையான சந்தை மதிப்பைத் தீர்மானிக்க, டிரோன்கள், புவியியல் தகவல் அமைப்பு மூலம் நில எல்லைகள் துல்லியமாக வரைபடமாக்கப்படுகின்றன. அத்துடன் வெளிப்படையான மின்னணு ஏல முறை பின்பற்றப்படுகிறது.

இத்திட்டம் பொருளியல் ரீதியாகப் பலன் அளித்தாலும், நில உரிமைகளில் உள்ள சட்டச் சிக்கல்கள், நிலப் பயன்பாட்டு மாற்றம் மற்றும் மாநில அரசுகளின் ஒத்துழைப்பு பெறுவது போன்ற பல்வேறு கட்டமைப்புச் சவால்களையும் மத்திய அரசு கடக்க வேண்டியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
நிலம்கட்டடம்நிறுவனம்உள்கட்டமைப்புதுறைமுகம்உற்பத்தி