வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு திருத்த மசோதாவை நிறுத்திவைத்த இந்திய அரசு

வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு திருத்த மசோதாவை நிறுத்திவைத்த இந்திய அரசு

2 mins read
63c004ba-52e0-47ff-8d6c-bb48d5370e52
ஏப்ரல் 1ஆம் தேதி, நாடாளுமன்றத்திற்கு அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள். - படம்: பிடிஐ

புதுடெல்லி: வெளிநாட்டு நிதிப் பங்களிப்பை முறைப்படுத்துவதற்கான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில், அதற்கான மசோதாவை இந்திய அரசு தற்காலிகமாக ஏப்ரல் 1ஆம் தேதி நிறுத்திவைத்தது.

வெளிநாடுகளிலிருந்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வரும் நிதியை முறைப்படுத்த மத்திய அரசால் அந்த சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் மார்ச் 25ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த மசோதா, சிறுபான்மையினருக்கு எதிரானது எனக் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், தேவாலய குழுக்கள் ஆகியவை குற்றஞ்சாட்டின. மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த மசோதா மக்களவையில் ஏப்ரல் 1ஆம் தேதி பரிசீலனைக்காகப் பட்டியலிடப்பட்டது. எனினும், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக மசோதா பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படாது என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியவுடன் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக கேரளத்தைச் சேர்ந்தவர்கள் மசோதாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

எனினும், தேச நலனை பாதுகாக்கவும் வெளிநாட்டு நிதி தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் தான் அந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாகத் திரு கிரண் ரிஜிஜு கூறினார்.

இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் ஷர்மா, அந்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.

மேலும், வெளிநாடுகளிலிருந்து வரும் நிதி, தீவிரவாத விவகாரங்களுக்குப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் தேசப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கவும் அந்த மசோதாவில் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்றார் அவர்.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கான காரணம்

நடப்பில் இருக்கும் சட்டத்தின்படி, ஒரு தொண்டு நிறுவனம் தான் பெறும் வெளிநாட்டு நிதியில் 50 விழுக்காடுவரை நிர்வாகச் செலவுகளுக்கு (ஊதியம், வாடகை போன்றவை) பயன்படுத்தலாம். அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத் திருத்தம் அதை 20 விழுக்காடு ஆகக் குறைத்துள்ளது.

இது அடிமட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்றும் பல நிபுணர்களை வேலைக்கு அமர்த்த முடியாமல் நிறுவனங்கள் முடங்கும் என்றும் எதிர்க்கட்சிகள் வாதிட்டன.

மேலும், வெளிநாட்டிலிருந்து நிதி பெறும் ஒரு பெரிய அமைப்பு, அதே போன்ற அனுமதி பெற்ற மற்றொரு சிறிய அமைப்பிற்கு நிதியை மாற்றந்தப் புதிய சட்டத் திருத்தம் அனுமதிக்காது. கிராமப்புறங்களில் செயல்படும் சிறிய அமைப்புகள் பெரும்பாலும் பெரிய அமைப்புகளின் நிதிப் பகிர்வை நம்பியே இருக்கின்றன. இந்தத் தடை அந்தச் சிறிய அமைப்புகளை அழித்துவிடும் எனச் சில அமைப்புகள் விமர்சிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்