வெங்காய விலையைக் கட்டுப்படுத்த இந்திய அரசு நடவடிக்கை

வெங்காய விலையைக் கட்டுப்படுத்த இந்திய அரசு நடவடிக்கை

கோப்புப் படம்: யுவர் ஸ்டோரி

24 Aug 2026 - 7:33 pm

1 mins read

புதுடெல்லி: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்துவரும் நிலையில், பயனீட்டாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் கையிருப்பில் உள்ள வெங்காயத்தைச் சில்லறை விற்பனைக்குக் கொண்டுவர அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.

இந்தியாவில் பருவமழை தாமதம், சில முதன்மை உற்பத்திப் பகுதிகளில் குறைந்த மழைப்பொழிவு காரணமாக வெங்காயச் சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அதன் விளைவாக டெல்லி, தமிழகம், கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காயத்தின் சில்லறை விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு சென்னையில் ஒரு கிலோ ரூ.33க்கு விற்பனையான வெங்காயம், தற்போது ரூ.58 வரை உயர்த்தப்பட்டு விற்கப்படுகிறது. டெல்லியில் அதன் விலை ரூ.65ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில் காரிப் பருவ வெங்காய உற்பத்தியில் ஏற்பட்ட 5 முதல் 7 விழுக்காடு சரிவே திடீர் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர, கூட்டுறவு நிறுவனங்கள், நுகர்வோர் அமைப்புகள் மூலம் கையிருப்பில் உள்ள 1.2 லட்சம் டன் வெங்காயத்தை நாடு முழுவதும் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, மகாராஷ்டிராவின் நாசிக் நகரிலிருந்து டெல்லி, சென்னை, கொச்சி ஆகிய நகரங்களுக்கு ‘கண்டா எக்ஸ்பிரஸ்’ (Ganda Express) எனப்படும் சிறப்புச் சரக்கு ரயில்கள் மூலம் வெங்காயம் அனுப்பி வைக்கப்படுகிறது.

முன்னதாக, மே மாதத்தில் ஒரு குவிண்டால் வெங்காயத்தின் கொள்முதல் விலை ரூ.1,270ஆக இருந்த நிலையில், கொள்முதலை விரைவுபடுத்துவதற்காக இந்த விலை ரூ.2,645ஆக உயர்த்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்