புதுடெல்லி: இந்திய அரசாங்கம் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
குடிமக்களுக்கான நலத்திட்டத்தின்கீழ் விநியோகிக்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து கரக்பூரில் உள்ள ஐஐடி பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வில் அரிசியின் நிலைத்தன்மை மற்றும் தரம் குறித்து அக்கறைகள் எழுந்தன.
செறிவூட்டப்பட்ட அரிசி குறைந்த நாள்களே சேமிப்புக் கிடங்குகளில் வைக்க முடியும் அதன் பின்னர் அது வீணாகக்கூடும் என்று தெரியவந்துள்ளது.
பல்கலைக்கழகம் சேமிப்புக் கிடங்குகளில் உள்ள நெல்லும் செறிவூட்டப்பட்ட அரிசியும் எவ்வளவு நாள்கள் நன்றாக இருக்கின்றன என்பது குறித்து ஆராய்ந்தது. சேமிப்புக் கிடங்கில் உள்ள வெப்பநிலை உள்ளிட்டவையும் அதில் அடங்கும்.
ஈரப்பதம், கிடங்கில் உள்ள வெப்பநிலை, காற்றில் அதிகச் சூடு, நெல் மற்றும் அரிசிகளை அடைத்து வைக்கும் பைகள் உள்ளிட்ட பல காரணங்களால் உணவு விரைவில் வீணாகக்கூடும். மேலும் அரிசியில் உள்ள ஊட்டச்சத்துக் குறையும் என்பதும் தெரியவந்தது.
பொதுவாக இந்தியாவில் நெல் மற்றும் செறிவூட்டப்பட்ட அரிசிகள் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை சேமிப்புக் கிடங்குகளில் இருக்கும்.
ஊட்டச்சத்துமிக்க உணவுகளை மக்கள் உண்ண வேண்டும் என்ற எண்ணத்தில் இந்திய அரசு ‘ஏழைகளுக்கான பிரதமரின் உணவுப் பாதுகாப்புத் திட்டம்’ உள்ளிட்ட திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அதன்மூலம் மில்லியன்கணக்கான மக்கள் பயனடைந்தனர்.
“மத்திய அரசு பல்கலைக்கழக ஆய்வை ஆராய்ந்தது. அதையடுத்து செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சரியான ஊட்டச்சத்து மிக்க உணவைக் கொடுக்க வேண்டும், நிலைமையைக் கண்காணித்து வருகிறோம். மாற்று ஏற்பாடு குறித்துப் பேசி வருகிறோம்,” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
மக்கள் நலத்திட்டத்தின்கீழ் 2019ஆம் ஆண்டு முதல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. முதல் மூன்று ஆண்டுகள் சோதனை கட்டமாக அது வழங்கப்பட்டது.
2022ஆம் ஆண்டு அந்தத் திட்டம் மேம்படுத்தப்பட்டு மற்ற உதவித்திட்டங்களுக்குக் கீழும் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் செய்யப்பட்டது.

