விசா முடிந்தும் இந்தியாவில் தங்கியுள்ள 350,000 வெளிநாட்டினர்

விசா முடிந்தும் இந்தியாவில் தங்கியுள்ள 350,000 வெளிநாட்டினர்

1 mins read
6421752d-e165-4168-b9a1-884583e4967f
இம்மாதத் தொடக்கத்தில் டெல்லியில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த நைஜீரியர் ஐவரைக் காவல்துறையினர் கைதுசெய்தனர். படம்: இந்திய ஊடகம் -
Google News Preferred Icon

புதுடெல்லி: விசா முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களைக் கண்டுபிடித்து, அவர்களின் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்ப இந்திய அரசு முடிவுசெய்துள்ளது.

அப்படி, விசா முடிந்தும் 350,000க்கும் மேற்பட்டோர் இந்தியாவில் தங்கியிருப்பதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சு வட்டாரங்கள் கூறின. அவர்களில் பெரும்பாலோர் இருக்கும் இடமே தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.

அப்படி அவர்கள் சட்டவிரோதமாகத் தங்க வழிவகை செய்துகொடுப்போர் அல்லது புகலிடம் அளிப்போர்மீது கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது குறித்து இந்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

இந்திய விசா மற்றும் பிற சேவைகளுக்காக 'சு சுவாகதம்' என்ற கைப்பேசிச் செயலியை இந்தியா கடந்த 2021 ஜூனில் அறிமுகப்படுத்தியது. வெளிநாட்டவர்களைத் திறம்பட கண்காணிப்பதை உறுதிசெய்யும் வகையில் அச்செயலி மேம்படுத்தப்படவுள்ளது.

அச்செயலி, 'எஃப்ஆர்ஆர்ஓ' எனப்படும் வெளிநாட்டினர் பதிவு அலுவலக இணையவாயிலுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. 60க்கு மேற்பட்ட நாடுகளில், பல்வேறு மொழிகளில் அச்செயலியைப் பயன்படுத்தலாம்.

அண்மையில் டெல்லியில் விசா காலம் முடிந்த பிறகும் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நைஜீரியர் ஐவரைக் கைதுசெய்ய காவல்துறையினர் முயன்றபோது அவர்கள் பெரும் சவாலை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.