உள்நாட்டு விமானக் கட்டண உச்சவரம்பை திரும்பப் பெற்ற இந்திய அரசு

உள்நாட்டு விமானக் கட்டண உச்சவரம்பை திரும்பப் பெற்ற இந்திய அரசு

கோப்புப்படம்: மாலை மலர்

22 Mar 2026 - 4:27 pm

2 mins read

புதுடெல்லி: உள்நாட்டு விமானக் கட்டண உச்சவரம்பை திரும்பப் பெறுவதாக இந்திய அரசு அறிவித்திருப்பது விமான நிறுவனங்களுக்கு நிவாரணம் அளிக்கும் நடவடிக்கையாக அமைந்துள்ளது என துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக உலக நாடுகள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக விமான நிறுவனங்கள் கடும் நிதிச்சுமையைச் சமாளிக்க வேண்டியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் இண்டிகோ நிறுவனம் தனது பல்வேறு விமானச் சேவைகளை திடீரென மொத்தமாக ரத்து செய்தது. இதையடுத்து மற்ற விமான நிறுவனங்களின் உள்நாட்டு விமானக் கட்டணம் பன்மடங்கு அதிகரித்தது.

இதைக் கட்டுப்படுத்த, டிசம்பரில் உள்நாட்டு விமானக் கட்டண உச்சவரம்பு அதிகரிப்பு உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளை விதித்தது இந்திய அரசு.

இந்நிலையில், விமானக் கட்டண உச்சவரம்பை ரத்து செய்து, இந்திய அரசு வெள்ளிக்கிழமை (மார்ச் 20) தேதியிட்ட அரசாணை ஒன்றில் குறிப்பிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகவை கூறியது.

கடந்த சனிக்கிழமை ராய்ட்டர்ஸ் அந்த உத்தரவை ஆய்வு செய்தது என்றும் அது இன்னும் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்றும் அம்முகவை தெரிவித்தது.

“விமானப் போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளன. நிலைமை சீரடைந்துள்ளது,” என்று இந்தியப் பொது விமானப் போக்குவரத்து அமைச்சு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் பதிலளிக்கவில்லை என்றது ராய்ட்டர்ஸ்.

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர் காரணமாக விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ளதாகவும் நடைமுறைச் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்து வருவதாகவும் இந்திய விமான நிறுவனங்கள் தொடர்ந்து கூறி வருகின்றன.

இந்நிலையில், விமானக் கட்டண உச்சவரம்பு போன்ற கட்டுப்பாடுகள் பெரும் வருவாய் இழப்புகளை ஏற்படுத்துவதாகக் கூறிய அந்நிறுவனங்கள், உடனடியாக அவற்றை நீக்குமாறு இந்திய அரசை வலியுறுத்தின.

எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்பதை அந்நிறுவனங்கள் அறிவிக்கவில்லை என்ற போதிலும், எரிபொருள் செலவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், உள்நாட்டு விமானக் கட்டண உச்சவரம்பை திரும்பப் பெறுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

கட்டணங்கள் நியாயமானதாகவும் வெளிப்படையானதாகவும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்றதாகவும் இருப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ள அரசு, பயணிகளின் நலன்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளுமாறும் விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
விமானம்மத்திய அரசுஇஸ்‌ரேல்ஈரான்போர்