பொருள் சேவை வரி முறையை எளிமைப்படுத்த செப்டம்பரில் கலந்துரையாடல்

1 mins read
a177c6b2-9e72-4ee2-8823-b312ae1f9c8c
கோல்கத்தாவில் மளிகைக் கடை. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்திய நிதியமைச்சர் தலைமையில் வழிநடத்தப்பட்ட பொருள், சேவை வரி கழகம், வரும் செப்டம்பர் 3ஆம் தேதியிலும் 4ஆம் தேதியிலும் சந்திப்பு நடத்தவுள்ளது. 

நாட்டின் வரி வசூல் முறையை எளிமைப்படுத்துவதற்கான வரி விலக்குகளைப் பற்றி இந்தச் சந்திப்பின்போது விவாதிக்கப்படும்.

இந்திய மாநிலங்கள் அனைத்தையும் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் பங்கேற்கவுள்ளனர்.

தற்போது 5 விழுக்காடு, 12 விழுக்காடு, 18 விழுக்காடு, 28 விழுக்காடு என நான்கு பிரிவுகளில் உள்ள இந்த வரி முறை, மேலும் கச்சிதமான இரு பிரிவுகளைக் கொண்டுள்ள முறைக்கு மாறுவது குறித்தும் பேசப்படும்.

பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையின்போது முன்வைக்கப்பட்ட இந்தத் திட்டம், இந்திய வரி முறையை மேலும் எளிமைப்படுத்துவதற்கான சீர்திருத்த பணிகளில் அங்கம் வகிக்கிறது.

முன்மொழியப்பட்ட திட்டத்தின்படி,12 விழுக்காடு மற்றும் 28 விழுக்காடுகளுக்கான பிரிவுகள் அகற்றப்பட்டு, 5 விழுக்காடு, 18 விழுக்காடு என இரண்டு பிரிவுகள் மட்டும் கொண்டுள்ள முறை அறிமுகம் செய்யப்படக்கூடும். 

ஒழுக்கக் கேடுப்பொருள்களுக்கும் அதிசொகுசுப் பொருள்களுக்கும் சிறப்பான 40 விழுக்காடு தீர்வை கருதப்படும். உயிர் காப்புறுதிகளுக்கு பொருள் சேவை வரி விலக்கு அளிப்பது குறித்தும் கலந்துரையாடப்படும்.

குறிப்புச் சொற்கள்