தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லண்டனில் சேதப்படுத்தப்பட்ட இந்தியத் தூதரகம்; ஆடவர் கைது

1 mins read
321e760d-186c-4a1b-b23c-fe33b0323c7a
லண்டன் இந்தியத் தூதரகத்திலுள்ள கொடிக் கம்பத்தில் இருந்து இறக்கப்பட்ட இந்திய மூவண்ணக் கொடி. படம்: ஊடகம் -

லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் சன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதை அடுத்து, வன்முறையில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மஞ்சள் நிற 'காலிஸ்தான்' கொடிகளை ஏந்தியபடி நேற்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 19) அத்தூதரகத்தின்முன் கும்பல் திரண்டதையும் முதல் மாடி முகப்பில் இருந்து இந்தியக் கொடியை ஒருவர் கீழிறக்கியதையும் சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகள் காட்டின.

இதனையடுத்து, காவல்துறை அழைக்கப்பட்டது. பாதுகாவலர் இருவர் சிறிய அளவில் காயமடைந்ததாகவும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் லண்டன் மாநகரக் காவல்துறை தெரிவித்தது.

இந்த வன்முறைச் சம்பவத்திற்கு லண்டன் மேயர் சாதிக் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் 'அவமானகரமானது' என்றும் 'முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது' என்றும் இந்தியாவிற்கான பிரிட்டிஷ் தூதர் அலெக்ஸ் எல்லிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் தூதரகத்தை வலியுறுத்தி இருக்கிறது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் 'வாரிஸ் பஞ்சாப் தே' என்ற காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தினர் பலர் கைது செய்யப்பட்டனர். அதன் தலைவர் அம்ரித்பால் சிங்கைக் காவல்துறை தேடி வருகிறது.

இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, லண்டனில் போராட்டம் இடம்பெற்றதாகச் சொல்லப்படுகிறது.