புதுடெல்லி: இந்தியாவில் வீடுகளின் விலை எதிர்பார்த்ததை விட வேகமாக உயர வாய்ப்புள்ளது.
பணக்கார வாடிக்கையாளர்களின் தேவை முக்கிய காரணமாக இருந்தபோதும் மலிவு விலை வீடுகளின் எண்ணிக்கை, சந்தையில் குறைவாக உள்ளது.
இதனால் பலர் அதிக விலை கொண்ட வாடகைக் குடியிருப்புகளில் சிக்கித் தவிக்க நேரிடும் என்று ராய்ட்டர்ஸ் அண்மையில் நடத்திய கருத்துக்கணிப்பில் பங்கேற்ற சொத்துச் சந்தை நிபுணர்கள் கருத்துரைத்தனர்.
சில நகரங்களில் மட்டுமே அதிக சம்பளமுள்ள வேலைகள் குவிந்திருப்பதாலும், பலருக்கு சம்பள உயர்வு தேக்கமடைந்திருப்பதாலும், வேலை தேடி நகரங்களுக்கு வரும் லட்சக்கணக்கான மக்களுக்கு வீடு வாங்குவது எட்டாத கனவாக மாறியுள்ளது.
இதனால் பெரும்பாலானோர் வாடகைக்குக் குடியேறும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.
ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளியலான இந்தியா, கடந்த காலாண்டில் 7.8% வளர்ச்சி கண்டிருந்தாலும், அதன் பலாபலன் வெகு சிலரையே அடைவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இது வேலை தேடுபவர்களைப் புறக்கணிக்கிறது.
வீட்டுக் கட்டுமானத் துறையிலும் இந்த ஏற்றத்தாழ்வு பிரதிபலிக்கிறது, ஆடம்பர வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளபோதும் மலிவு விலை வீடுகளின் உருவாக்கம் தேவைக்கேற்பக் கட்டித்தரப்படுவதில்லை.
இந்தியாவில் தற்போது சுமார் 10 மில்லியன் மலிவு விலை வீடுகளுக்கான தேவை உள்ளது. இந்த இடைவெளி 2030-ஆம் ஆண்டிற்குள் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று நைட் ஃபிராங்க் நிறுவனம் கணித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த பத்து ஆண்டுகளில் இரு மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ள சராசரி வீட்டு விலைகள், 2024-ல் சுமார் 4.0% அதிகரித்த நிலையில், இந்த ஆண்டு 6.3% ஆகவும், 2026-ல் 7.0% ஆகவும் உயரும் என்று ராய்ட்டர்ஸ் அண்மையில் மதிப்பிட்டுள்ளது.