புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நாட்டின் 80வது சுதந்திர தின விழாவில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இருவரும் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகப் பங்கேற்கவில்லை.
2024ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின்போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ராகுல் காந்திக்கு, வழக்கமான முதல் வரிசைக்குப் பதிலாக இரண்டாவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கவே இருக்கை அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சு அப்போது விளக்கியிருந்தது.
இந்நிலையில், நடப்பு நாடாளுமன்றப் பருவமழைக்காலக் கூட்டத்தொடரில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே நிலவிய மோதல் போக்கு, சுதந்திர தின விழாவிலும் எதிரொலித்துள்ளது. கூட்டத்தொடர் நிறைவடைந்ததும் நாடாளுமன்ற நாயகர் ஓம் பிர்லா அளித்த தேநீர் விருந்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.


