புதுடெல்லி: இந்திய தொழில்துறை உற்பத்தி 7.8 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவான வளர்ச்சி விகிதத்தைவிட அதிகமாகும்.
உற்பத்தி, சுரங்கம், மின்சாரம் ஆகிய மூன்று முக்கியமான துறைகளில் அனைத்து செயல்பாடுகளும் சிறப்பாக இருந்ததே தொழில்துறை வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுதொடர்பாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) புதிய புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் இந்திய தொழில்துறை வளர்ச்சி 3.7 விழுக்காடாக மட்டுமே பதிவான நிலையில், 2025 டிசம்பரில் அது இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரித்து, 7.8%ஆகப் பதிவாகி உள்ளது.
உற்பத்தித் துறையைப் பொறுத்தவரை, கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பரில் 3.7 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. அது தற்போது 8.1%ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல் சுரங்கத்துறை உற்பத்தி விகிதம், 2024 ஆண்டின் 2.7% வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், தற்போது 6.8% வளர்ச்சியை அடைந்துள்ளது.
மின்சாரத்துறை உற்பத்தியும் 6.3% வளர்ச்சி கண்டுள்ளதாக இந்திய புள்ளியியல் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய அளவில் முன்னிலை வகிக்கும் தொழில்களையும் அந்த அலுவலகம் பட்டியலிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதன்படி, கணினி, மின்னணுச் சாதனங்களின் உற்பத்தி 34.9%ம், காா் உள்ளிட்ட மோட்டாா் வாகன உற்பத்தி 33.5%ம் இதர போக்குவரத்துக் கருவிகள் 25.1%ம் வளர்ச்சி அடைந்துள்ளதாக மேற்குறிப்பிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
தவிர, அடிப்படை உலோகங்கள் மருந்துப் பொருள்கள் தயாரிப்பும் நாட்டின் ஒட்டுமொத்த தொழில்துறை வளர்ச்சிக்குக் கைகொடுத்துள்ளன.
இதனிடையே, உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானப் பொருள்கள் உற்பத்தி 12.1% வளர்ச்சி கண்டுள்ளதாகவும், நுகர்வோர் சாதனங்கள் உற்பத்தி 12.3% வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும் தேசிய புள்ளியியல் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

