புதுடெல்லி: இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 1) நடத்தப்பட்ட தாக்குதலில் 31 வயது மாது உட்பட இருவர் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட பெண்ணின் எட்டு வயது மகள், மூன்று பொதுமக்கள் இரண்டு காவல்துறை அதிகாரிகள் ஆகிய அறுவர் காயமடைந்துள்ளனர்.
வன்முறை வெடித்ததையடுத்து அங்கு மத்திய, மாநில காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டக்காரர்கள் ஆளில்லா வானூர்திகளைப் (ட்ரோன்) பயன்படுத்தி பாதுகாப்புப் படைகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளனர். முன்னறிவிப்பில்லாத அத்தாக்குதல்களில் குண்டுகளை அவர்கள் வீசியதாக அம்மாநில காவல்துறை தெரிவித்தது.
“பாதுகாப்புப் படையினர், பொதுமக்கள் மீது தாக்குதலை நடத்த ஆளில்லா வானூர்திகள் பயன்படுத்தப்படுவது வன்முறை மோசமடைவதைக் குறிக்கிறது” என்று மணிப்பூர் காவல்துறை செப்டம்பர் 1ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
மாநில தலைநகர் இம்பாலுக்கு வெளியே “குகி” போராளிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அந்த அறிக்கை கூறியது.
மணிப்பூரில் பெரும்பான்மை இந்துக்களின் மெய் தேய் சமூகத்திற்கும் கிறிஸ்துவ குக்கி சமூகத்திற்கும் இடையே 2023 மே மாதம் ஏற்பட்ட வன்முறையில் 220க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். கிட்டத்தட்ட 1,108 பேர் படுகாயமடைந்தனர். பழங்குடியின பெண்கள் பலர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்ற வன்முறையில் கலவரங்களும் தீவைப்புச் சம்பவங்களும் அரங்கேறின. சில நாட்கள் மணிப்பூர் முழுவதும் பற்றி எரிந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். பலர், அண்டை மாநிலங்களில் குடியேறினர். தற்பொழுதுவரை அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
நிலம், பொதுத்துறையில் வேலை போன்றவை சார்ந்து இரு குழுக்களுக்கிடையில் நீண்டகாலப் பதற்றநிலை நிலவுகிறது. உள்ளூர் தலைவர்கள் அரசியல் ஆதாயத்துக்காக இனப் பிளவுகளை அதிகப்படுத்துவதாக வலதுசாரி போராளிக்குழுக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.