ஹைதராபாத்: சவூதி அரேபியாவின் ரப் அல் காலி பாலைவனத்தில் சிக்கிக்கொண்ட இந்தியர் ஒருவர், குடிக்க நீரின்றி, உடலில் நீர்ச்சத்து இழந்து, களைத்துப்போய் அங்கேயே மாண்டுபோனார்.
இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், கரீம் நகரைச் சேர்ந்தவர் முகம்மது ஷெஸாத் கான். இவர் கடந்த மூவாண்டுகளாகச் சவூதியில் ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், ரப் அல் காலி பாலைவனத்தின் ஆபத்தான பகுதியில் ஷெஸாத் சிக்கிக்கொண்டார். உலகின் ஆபத்துமிக்க பகுதிகளில் அதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது.
சவூதியின் தென்பகுதியிலும் அண்டை நாடுகளிலும் 650 கிலோமீட்டருக்குமேல் நீண்டு கிடக்கும் ரப் அல் காலி, கடுமையான சூழலுக்குப் பெயர்பெற்றது.
தடங்காட்டி (ஜிபிஎஸ்) சமிக்ஞை கிடைக்காததால் ஷெஸாத்தும் அவருடன் பணியாற்றிய சூடானியர் ஒருவரும் பாலைவனத்தில் சிக்கிக்கொள்ள நேர்ந்ததாகக் கூறப்பட்டது. ஷெஸாத்தின் கைப்பேசியில் மின்னூட்டம் தீர்ந்துபோனது நிலைமையை மேலும் மோசமாக்கியது.
இதனால் அவர்களால் உதவிகோர இயலாமல் போனது. அவர்களின் வாகனத்திலும் எரிபொருள் தீர்ந்துபோனதால், உணவும் நீருமின்றி, பாலைவனத்தில் கொளுத்திய அனலில் அவர்கள் திக்கு தெரியாமல் சிக்கிக்கொண்டனர்.
கடும் வெப்பத்தில் அவர்கள் உயிருக்குப் போராடினர். ஆயினும், உடலில் நீர்ச்சத்து குறைந்ததாலும் உடற்சோர்வாலும் அவர்கள் இருவரும் பாலைவனத்திலேயே மாண்டுபோயினர்.
நான்கு நாள்களுக்குப் பிறகு, அதாவது கடந்த வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 22) அவர்களின் வாகனத்திற்கு அருகிலேயே அவ்விருவரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

