மும்பை: ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்து சண்டையிட்ட இந்திய ஆடவர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் காயமடைந்த இன்னொருவர் மாஸ்கோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 14) இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
இந்த விவகாரத்தை மாஸ்கோவிலுள்ள ரஷ்ய அதிகாரிகளிடமும் புதுடெல்லியிலுள்ள ரஷ்யத் தூதரகத்திடமும் இந்திய அரசாங்கம் கொண்டுசென்றுள்ளது. ரஷ்ய ராணுவத்தில் இருக்கும் எஞ்சிய இந்திய நாட்டவர்களை விரைந்து விடுவிக்கும்படி மீண்டும் வலியுறுத்தி இருப்பதாக அமைச்சு ஓர் அறிக்கைமூலம் தெரிவித்துள்ளது.
“மாண்டவரின் உடலை விரைந்து இந்தியாவிற்குக் கொண்டுவர ரஷ்ய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். அத்துடன், காயமடைந்த இன்னொருவரை இந்தியாவிற்கு மீட்டுவரவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்,” என்று அமைச்சு கூறியுள்ளது.
மாண்டவர் கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டம், வடக்கஞ்சேரியைச் சேர்ந்த 32 வயது டி.பி. பினில் என்றும் காயடைந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த டி.கே. ஜெயின், 27, என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி தெரிவித்தது.
இருவரும் உறவினர்கள் என்றும் கூறப்பட்டது.
முன்னதாக, கவர்ச்சிகரமான வேலை அல்லது பல்கலைக்கழகத்தில் இடம் என ஆசைகாட்டி, பலரையும் ரஷ்யாவிற்கு அழைத்துச் சென்று, உக்ரேனுக்கு எதிரான போரில் ஈடுபடக் கட்டாயப்படுத்தியதாகக் கூறி, ஆட்கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில், கடந்த மே மாதம் இந்தியக் காவல்துறை நால்வரைக் கைதுசெய்தது.
கடந்த 2024ஆம் ஆண்டில் ரஷ்யா - உக்ரேன் போரின்போது இந்தியர்கள் மாண்டதை அடுத்து, ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்களைச் சேர்ப்பதை நிறுத்துமாறு இந்திய அரசாங்கம் வலியுறுத்தியது.
அத்துடன், ரஷ்யாவில் வேலைவாய்ப்பு என எவரேனும் கூறினால் கவனமாக இருக்கும்படி இந்தியர்களும் அறிவுறுத்தப்பட்டனர்.
ரஷ்ய ராணுவத்திலிருந்து 45 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் மேலும் 50 பேரை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கடந்த செப்டம்பர் மாதம் இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்திருந்தது.

