கனடாவில் இந்திய ஆடவர் சுட்டுக்கொலை

கனடாவில் இந்திய ஆடவர் சுட்டுக்கொலை

படம்: டெக்கான் ஹெரால்டு

10 Feb 2026 - 8:08 pm

1 mins read

டொரான்டோ: கனடாவின் டொரான்டோ நகரில் 37 வயது இந்தியத் தகவல் தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அங்குள்ள மக்கள் நடமாட்டமிக்க கடைத்தொகுதியின் வாகன நிறுத்துமிடத்தில் கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 7) பிற்பகல் 3.30 மணியளவில் அடையாளம் தெரியாத சிலர் அவரைச் சுட்டுக் கொன்றதாகக் காவல்துறை தெரிவித்தது.

ஆர்.என். சந்தன் குமார் என்ற இந்த ஆடவர் பெங்களூர் நகரைச் சேர்ந்தவர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்றபோது துப்பாக்கிக்குண்டுக் காயங்களுடன் சந்தன் கிடந்ததைக் கண்டதாகக் காவல்துறை தெரிவித்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அங்கே சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்ததாகவும் காவல்துறை கூறியது.

சன்னல் கண்ணாடியில் துப்பாக்கிக்குண்டுகள் பாய்ந்ததற்கான துளைகளுடன் வெள்ளை நிற கார் ஒன்று அங்கிருந்ததைப் படங்கள் காட்டியதாக சிடிவி நியூஸ் செய்தி தெரிவித்தது.

சந்தனின் கொலைக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆயினும், கன்னடம் சார்ந்த நிகழ்ச்சிகளில் சந்தன் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்ததால் பொறாமை காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் கூறினர்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாகக் கனடாவில் சந்தன் வேலை செய்துவந்ததாக அவரது தாயார் ஷைலஜா நந்தகுமார் தெரிவித்தார். கொல்லப்படுவதற்கு முதல்நாள்தான் சந்தன் தங்களுடன் பேசியதாகவும் அவர் சொன்னார்.

சுட்டுக்கொல்லப்பட்ட சந்தனுக்கு இன்னும் திருமணமாகவில்லை.

குறிப்புச் சொற்கள்