அமெரிக்காவில் பீட்சா விநியோகிக்கச் சென்ற இந்திய ஆடவர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் பீட்சா விநியோகிக்கச் சென்ற இந்திய ஆடவர் சுட்டுக்கொலை

1 mins read
91f093de-9ac3-4ab1-8478-b04293bac5ec
சுட்டுக்கொல்லப்பட்ட அன்ஷுல் குஞ்சா. - படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

பிலடெல்ஃபியா: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் இந்திய ஆடவரான அன்ஷுல் குஞ்சா (28) சுட்டுக்கொல்லப்பட்டார்.

வட பிலடெல்ஃபியாவில் உள்ள எட்ஜ்லி குடியிருப்பு வளாகத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு மேல் அந்தச் சம்பவம் நடைபெற்றதாகக் காவல்துறை தெரிவித்தது.

அங்குள்ள ஒரு வீட்டுக்கு பீட்சா விநியோகம் செய்யச் சென்ற அவர் தலையில் சுடப்பட்டார்.

விநியோகம் செய்யப்பட்ட முகவரி, குடியிருப்பு இல்லாத காலி வீடாக இருந்தது. இருப்பினும், ‘ஆர்டர்’ செய்யப்பட்ட தொலைபேசி எண்ணை காவல்துறை கண்டுபிடித்து விசாரணை நடத்தி வருகிறது.

“சுடப்பட்ட ஆடவர் தரையில் சுயநினைவின்றி கிடந்தார். தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் அதிக ரத்தப்போக்கு இருந்தது,” என்று பிலடெல்ஃபியா காவல்துறையின் தலைமை ஆய்வாளர் ஸ்காட் ஸ்மால் கூறினார்.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

“பீட்சா பெட்டிகளைப் பார்த்ததில் இருந்து அந்த பீட்சா கடையை எங்களால் அடையாளம் காண முடிந்தது,” என்று அந்த அதிகாரி கூறினார்.

அந்த ஆடவர் பீட்ஸ் பீட்சாவில் பணிபுரிந்தவர் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திலிருந்து சில அங்குல தூரத்தில் மூன்று தோட்டா உறைகளைக் காவல்துறை மீட்டெடுத்தது.

“துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பாதிக்கப்பட்டவருக்கு மிக அருகில் நின்றதற்கான அறிகுறி இது,” என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

கொல்லப்பட்டவரின் வாகனமும் சம்பவ இடத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது. அதனுள் பீட்சா சூடாக்கும் கருவி ஒன்று இருந்தது.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காகொலைகாவல்துறை