மும்பை: தாய்லாந்திலிருந்து இந்தியாவின் மும்பை நகருக்குப் பல பாம்புகளைக் கடத்தி வந்த ஆடவரை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர்.
அந்த இந்திய ஆடவரிடம் 44 இந்தோனீசிய கட்டுவிரியன் வகைப் பாம்புகள் உள்ளிட்ட பல நஞ்சுப் பாம்புகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆடவர் தமது பயணப் பெட்டிக்குள் பாம்புகளை அடைத்து வைத்திருந்தார் என்று மும்பை சுங்கத்துறை ஓர் அறிக்கைமூலம் தெரிவித்தது.
கைது செய்யப்பட்ட ஆடவரின் மற்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. அவரிடம் ஐந்து ஆமைக் குஞ்சுகளும் மூன்று சிலந்தி வகை கட்டுவிரியன் பாம்புகளும் இருந்தன.
ஆடவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பாம்புகளின் படங்களை அதிகாரிகள் வெளியிட்டனர். பாம்புகள் நீலம், மஞ்சள் உள்ளிட்ட வண்ணங்களில் இருந்தன.
பொதுவாக மும்பை விமான நிலையத்தில் கடத்தல் தங்கம், கஞ்சா, போதைப்பொருள் உள்ளிட்டவைதான் பிடிபடும். பாம்புகள் போன்ற ஊர்வன பிடிபடுவது அரிதான ஒன்று என்று அதிகாரிகள் கூறினர்.
கடந்த பிப்ரவரி மாதம் மும்பை விமான நிலையத்தில் ஐந்து குரங்குக் குட்டிகளைக் கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார்.
அந்தக் குரங்குகள் இந்தோனீசியா, மலேசியா, தாய்லாந்து காடுகளில் இருக்கக்கூடியவை.