புதுடில்லி: இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், தலிபான் இடைக்கால வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாக்கியிடம் வியாழக்கிழமை அதிகாரபூர்வ விதத்தில் தொலைபேசியில் உரையாடியுள்ளார். அது, ஆப்கானிஸ்தானின் தலிபான் நிர்வாகத்துக்கு இந்தியா விடுத்துள்ள முதல் அமைச்சர் நிலை அழைப்பு.
பாகிஸ்தானுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் காஷ்மீரில் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு ஆப்கானிஸ்தானின் தலிபான் அமைப்பு கண்டனம் தெரிவித்ததை அடுத்து டாக்டர் ஜெய்சங்கர் திரு முட்டாக்கியிடம் தொலைபேசியில் உரையாடினார்.
உரையாடலுக்குப் பின், “ஆப்கானின் வெளியுறவு அமைச்சர் மவ்லாவி அமிர் கான் முட்டாக்கியுடன் நல்ல உரையாடல் அமைந்தது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு அவர் கண்டனம் தெரிவித்ததை அதிகமாக வரவேற்கிறோம்,” என்று எக்ஸ் தளத்தில் டாக்டர் ஜெய்சங்கர் பதிவிட்டார்.
ஆப்கான் மக்களுடன் இந்தியா கொண்டுள்ள பாரம்பரிய நட்பைச் சுட்டிக் காட்டியதோடு அவர்களின் வளர்ச்சிக்கான தொடர் ஆதரவையும் டாக்டர் ஜெய்சங்கர் உரையாடலில் குறிப்பிட்டதாகச் சொன்னார். ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிகள் பற்றி ஆராய்ந்து கலந்துரையாடியதையும் அவர் தெரிவித்தார்.
ஜம்மு, காஷ்மீரில் நடந்த சம்பவங்களுடன் தலிபானைத் தொடர்புபடுத்திய பாகிஸ்தானின் கூற்றைச் சுட்டிய டாக்டர் ஜெய்சங்கர், “இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே போலியான தகவல்கள் மூலம் அவநம்பிக்கையை ஏற்படுத்த செய்யப்படும் முயற்சிகளை திரு முட்டாக்கி உறுதியாக நிராகரித்ததைப் பாராட்டுவதாகச் சொன்னார்.
தொலைபேசி அழைப்பின்போது ஆப்கான் மக்களுக்கு இன்னும் கூடுதலான விசாக்கள் வழங்கும்படி திரு முட்டாக்கி டாக்டர் ஜெய்சங்கரிடம் கேட்டுக்கொண்டதாகவும் தலிபான் தொடர்பு இயக்குநர் ஹஃபிஸ் சியா அகமது தெரிவித்தார்.
இருதரப்பு வர்த்தகம், இந்தியச் சிறைகளில் உள்ள ஆப்கானியக் கைதிகளின் விடுதலை, ஈரானில் உள்ள சபஹார் துறைமுகத்தின் மேம்பாடு ஆகியவை குறித்தும் இரு அமைச்சர்களும் கலந்துரையாடினர்.
ஆஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா அதன் துருப்புகளை மீட்டுக்கொண்டதை அடுத்து ஆகஸ்ட் 2021லிருந்து இந்தியாவும் தலிபான் நிர்வாகமும் அவற்றின் உறவை வலுப்படுத்த முயன்றுவருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
வரலாற்றுபூர்வ உறவுகளைக் கொண்டு இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் இருநாட்டுப் பேராளர்கள் நடத்திய தொடர் கூட்டங்கள் வழி விரிவான ஒத்துழைப்பை ஏற்படுத்துகின்றன.
இருதரப்பு உறவு இன்னும் வழக்கநிலைக்கு வரவில்லை என்றபோதும் தலிபான் நிர்வாகத்தின்கீழ் உள்ள ஆப்கானிஸ்தானில் மனிதநேய உதவிகளை வழங்குவதிலும் ஆப்கானிய குடிமக்களின் நலனைப் பேணுவதிலும் இந்தியா கவனம் செலுத்துகிறது.